சட்டமன்ற தேர்தலில் டெபாசிட் இழந்தாரா ஜெயலலிதா..? அண்ணாமலை சொன்னது உண்மையா.?? தேர்தல் ஆணையம் கூறுவது என்ன.?
ஜெயலலிதா டெபாசிட் இழந்தார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியநிலையில், 1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் சுகவனத்திடம் ஜெயலலிதா தோல்வி அடைந்தார். ஆனால் டெபாசிட் இழக்கவில்லையென தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா டெபாசிட் இழந்தாரா.?
அதிமுக-பாஜக இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. ஒருவருக்கொருவர் திட்டி கருத்துகளை தெரிவித்து வந்தனர். இதன் காரணமாக கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நான் இங்கு இட்லி, தோசை சாப்பிட வரவில்லை. ஜெயலலிதா, கருணாநிதி போல் நானும் ஒரு தலைவர். நான் எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறேன். ஜெயலலிதாவிற்கு தேர்தலில் டெபாசிட் போச்சு, துணிந்து நின்றார்கள் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றார்கள். ஏன் என்றால் அவர் தலைவர், டெபாசிட் போனதற்காக ஜெயலலிதா பின்வாங்கவில்லை. ஜெயலலிதாவிற்கு டெபாசிட் போகவில்லையா போச்சு என கூறியிருந்தார். இந்த கருத்து அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜெயலலிதா
இந்தநிலையில் ஜெயலலிதா 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். ஆனால் டெபாசிட் இழக்கவில்லையென தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவித்துள்ளன. அதிமுகவிற்கு 1996 ஆம் ஆண்டு தேர்தல் மோசமான தேர்தலாக அமைந்தது. இதற்கு என்ன காரணம் என்பதை தற்போது பார்க்கலாம். எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிரச்சனையால் ஜெயலலிதா- ஜானகி என தனி அணியாக அதிமுக பிளவுபட்டது. இதனையடுத்து அதிமுக ஒன்றினைந்த பிறகு 1991 ஆம் ஆண்டுநடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். அவரது ஆட்சி காலத்தில் பல்வேறு மக்கள் நலதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் ஒரு சில நிகழ்வுகள் ஜெயலலிதா அரசியல் வாழ்க்கையில் கரும்புள்ளியாக அமைந்தது.
கரும்புள்ளியாக நிகழ்வுகள்
அவரது ஆட்சி காலத்தில் 1992 ஆம் ஆண்டில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுடன் கும்பகோணம் மகாமம் குளத்தில் ஆடம்பரமான இறை வழிபாடு செய்த போது அவரையும்,அவரின் தோழி சசிகலாவையும் காண வந்த மக்கள்கள் கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் இறந்து போனார்கள். இதனையடுத்து ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தின் போது நடைபெற்ற ஆடம்பர நிகழ்வுகள் வாக்காளர்களின் அதிருப்தியை மேலும் அதிகப்படுத்தியது. இதனையடுத்து 1996 ஆம் ஆண்டு தேர்தலின் போது திமுக–தமாகா கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக அந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக 167 இடங்களிலும், தமிழ் மாநில காங்கிரஸ் 39 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8 இடங்களிலும், இந்திய தேசிய லீக் 5 இடங்களிலும் வெற்றி பெற்றது.
தோல்வி அடைந்த ஜெயலலிதா
அதிமுகவை பொறுத்தவரையில் நான்கே நான்கு இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் போட்டியிட்ட ஜெயலலிதா தோல்வி அடைந்தார். திமுக வேட்பாளர் இ ஜி சுகவனம் 59 ஆயிரத்து 148 வாக்குகள் பெற்றிருந்தார். அதிமுக பொதுச்செயலாளரும் அப்போதைய முதலமைச்சருமான ஜெயலலிதா 50,782 வாக்குகள் பெற்றிருந்திருந்தார். இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 8ஆயிரத்து 366 ஆக இருந்தது. எனவே ஜெயலலிதா தேர்தலில் தோல்வி அடைந்தாரே தவிர டெபாசிட் இழக்கவில்லை என தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்