ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைக்கும் பணி.! மேலும் கால அவகாசம் தேவை- திமுக கூட்டணி கட்சி திடீர் கோரிக்கை
பிப்ரவரி 15 வரை மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு செய்ய நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதை மேலும் கால அவகாசம் கொடுத்து நீடிப்பு செய்ய வேண்டும் என ஈ.ஆர்.ஈஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு
ஆதான் எண்ணுடன் மின் இணைப்புக்கான கால அவகாசம் வருகிற 15 ஆம் தேதியோடு முடிவடையவுள்ள நிலையில், மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு வரும் பிப்ரவரி 15-ம் தேதி வரை வீடுகளுக்கான மின் இணைப்புகளில் ஆதார் எண்ணை இணைக்க கால நீடிப்பு செய்துள்ளது. இதை மேலும் நீடிக்க வேண்டும்.
ஏன் என்றால், மின் இணைப்புகளுடன் ஆதார் எண்களை இணைப்பதற்கு மின் இணைப்பின் உரிமையாளர், வாடகைதாரர் மற்றும் உரிமைதாரர் அல்லாத வாரிசு அடிப்படையில் மின் இணைப்பு பயன்படுத்தி வருபவர்கள் என பயனாளர்களின் ஆதார் எண் மின் இணைப்பு எண்களுடன் இணைக்கப்பட்டு வருகிறது. மின் இணைப்புகளுடன் எந்த ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது என்ற விபரங்கள் பொதுமக்கள் பார்த்து அறிந்து கொள்ளும் வசதி இதுவரை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.
கூடுதல் கால அவகாசம் தேவை
மேலும் தவறாக ஏதாவது ஆதார் எண்கள் உள்ளீடு செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டிருந்தால் அவற்றை மாற்றும் வசதியும் இதுவரை ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் மற்றும் வாடகைதாரர்கள் நலன் கருதி மின் இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் எண்களை சரிபார்க்கும் வசதியும் தவறான ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு இருந்தால் அவற்றை மாற்றும் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும்.
இதற்கு உண்டான கால அவகாசமும் பொதுமக்களுக்கு நீடிப்பு செய்து கொடுக்க வேண்டியது மக்கள் நலன் காக்கும் தமிழ்நாடு அரசின் கடமையாகும். எனவே வரும் பிப்ரவரி 15 வரை மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு செய்ய நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதை மேலும் கால அவகாசம் கொடுத்து நீடிப்பு செய்ய வேண்டும் என ஈ.ஆர்.ஈஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்
ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைவோம்.! அதிமுகவை மீட்போம்- டிடிவி தினகரன் உறுதி