அதிமுக மாநாட்டிற்கு பயந்து திமுக போராட்டம் .! நீட் விவகாரத்தில் ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார்- விளாசும் இபிஎஸ்
மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாடுக்கு எதிராக வேண்டுமென்ற வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, மாநாட்டிற்கு தேவையான நாங்கள் பல்வேறு அனுமதியெல்லாம் பெற்றுள்ளோம் என கூறினார்.
அதிமுக மாநாட்டால் திமுக அச்சம்
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவே வியக்கும் வகையில் அதிமுக மாநாடு இருக்கும். இந்த மாநாடு நடப்பதை பயந்து திமுக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் விலக்கு முதல் கையெழுத்து என்று சொல்லி, மக்களை ஏமாற்றி வாக்கு கேட்டார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்ற கூறிய நிலையில், இரண்டு ஆண்டுகள் உருண்டோடியும் அவர்கள் என்ன செய்தார்கள் என கேள்வி எழுப்பினார். நீட் விலக்குகாக நாங்களே பல்வேறு முயற்சிகள் எடுத்துள்ளோம்.
நீட் தேர்வு ரத்து செய்ய என்ன நடவடிக்கை
இவர்கள் நீட் விலக்குகாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி மூலமாக வலியுறுத்தி அனைவரிடம் கேட்டு, நாடாளுமன்றத்திலாவது குரல் எழுப்பியிருக்கலாம் அதையும் செய்யவில்லை. நீட் விவாகரத்தில் ஆளுநர் மீது குற்றம்சாட்டி திமுக தொடர்ந்து நாடகமாடுகிறது. நீட் விவாகரம் தொடர்பாக திமுக பேசுவது எல்லாம் பொய். அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது நீட் தேர்வை ரத்து செய்யும் வரை, அதற்காக பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தது. நீட் தேர்வை எதிர் கொண்டு அதில் நல்ல மதிப்பெண் பெற்று தமிழக மாணவர்கள் மருத்துவர்கள் ஆக வேண்டும் என்று அவர்களுக்கு பயிற்சி அளித்தோம். அதையும் திமுக அரசு கைவிட்டு விட்டது.
விவசாயம் பாதிப்பு
முதலமைச்சர் ஸ்டாலின் நானும் டெல்டா காரன் என்று சொன்னார். ஆனால் கர்நாடக அரசிடம் பேசி காவிரி நீரை பெற்று தராமல் போனதால் பயிர்கள் எல்லாம் கருகி போனது. மதுரை மாநாடுக்கு எதிராக வேண்டுமென்ற வழக்கு தொடர்ந்துள்ளார்கள். நாங்கள் பல்வேறு அனுமதியெல்லாம் பெற்றுள்ளோம். இந்தியாவிலே அதிகம் கடன் வாங்கிய மாநிலமாக தான் தமிழகம் உள்ளது. 2 லட்சத்து 73 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திமுக அரசு வாங்கியிருக்கிறது. அதைத்தான் கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக அரசு செய்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
சசிகலாவால் தனக்கும் தன் கணவர் மாதவனின் உயிருக்கும் ஆபத்து..! போலீசில் ஜெ.தீபா பரபரப்பு புகார்