தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி.! 330 தொகுதிகளில் வெற்றி- அடித்து கூறிய இபிஎஸ்
தேசிய ஜனநாயக கூட்டணியில் சிறிய கட்சிகள், பெரிய கட்சிகள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் உரிய மரியாதை கொடுக்கப்பட்டிருக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
330 இடங்களில் வெற்றி
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இதனை தொடர்ந்து இன்று காலை விமானம் மூலம் சென்னை திரும்பினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, இன்று உலக அளவில் இந்தியாவை பெருமைப்படுத்தி உள்ளார் பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஒன்பதாண்டு காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக ஆட்சி செய்துள்ளார். இன்று இளைஞர்களுக்கு என்ன தேவை என்ற அடிப்படையில் மத்திய பாஜக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 330 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவோம்.
ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக
தேசிய ஜனநாயக கூட்டணியில் சிறிய கட்சிகள், பெரிய கட்சிகள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் உரிய மரியாதை கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம் தான். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திமுக இருக்கும் சமயத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆர் ராசா, கனிமொழி கைது செய்யப்பட்டார்கள். சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். இப்பொழுது சிறையில் இருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மீதும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள. ஊழல் செய்வதே திராவிட முன்னேற்றக் கழகம் தான், அவர்களுக்கு அ.தி.மு.க.வை குறை கூற அருகதை கிடையாது.
கொடுநாடு வழக்கு குற்றவாளிகள் கைது
பெங்களூரில் எதிர்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரின் மீதும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. கொடநாடு வழக்கில் சம்பவம் நடந்த உடனே குற்றவாளிகளை கண்டுபிடித்தது அதிமுக ஆட்சியில் தான், குற்றவாளிகளை கைது செய்ததும் அதிமுக ஆட்சியில் தான், ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது குற்றவாளிகளுக்காக ஜாமீனுக்கு வாதாடியது திமுக வழக்கறிஞர்கள் என குற்றம்சாட்டினார். டெண்டர் நடைபெறாமல் முறைகேடு நடந்ததாக என மீது வழக்கு பதிய ஆர்.எஸ்.பாரதி முயன்றார். ஆனால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி
எல்லா கட்சிகளுமே தேர்தலில் வெற்றி பெறுவது தான் நோக்கம் அப்பொழுது சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமையும். தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழகத்தை பொறுத்தவரை இந்த கூட்டணிக்கு தலைமை தாங்குவது அதிமுக தான், கர்நாடகா அமைச்சர் டி. கே.சிவகுமார்-ருடன் தமிழக முதல்வர் இணக்கமாக இருக்கிறார் , அவர் ஏன் மேகதாதில் அணை கட்டக்கூடாது என்ற கோரிக்கையை நேரடியாக வைக்கக்கூடாது ? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
இதையும் படியுங்கள்
டெல்லியில் ஓங்கிய எடப்பாடி பழனிசாமியின் கை..! கழட்டிவிடப்பட்ட ஓபிஎஸ்-பாஜகவின் திட்டம் என்ன.?