அஸ்ஸாமில் 19 லட்சம் பேரை ஹிட்லர் போல அகதிகளாக அடைத்து வைத்திருக்கிறார்கள். நம்மையும் கொண்டு போய் நாளை அங்கு அடைத்துவிடுவார்கள் என்று சட்டப்பேரவை துணை தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கேள்வி எழுப்பினார். “என்.பி.ஆர் படிவத்தில் அப்பா, அம்மா, பாட்டி பெயர் போன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதற்கு பதில் தெரியவில்லை என்றால் என்ன பண்டிகை கொண்டாடினீர்கள் எனக் கேட்கப்படுகிறது. தீபாவளி, பொங்கல் என்றால் விட்டுவிடுவார்கள். ஆனால், ரம்ஜான், பக்ரீத் என்றால் விடமாட்டார்கள். அஸ்ஸாமில் 19 லட்சம் பேரை ஹிட்லர் போல அகதிகளாக அடைத்து வைத்திருக்கிறார்கள். நம்மையும் கொண்டு போய் நாளை அங்கு அடைத்துவிடுவார்கள். அன்றைக்கு நீங்கள் இருப்பீர்கள். அவர்களின் நிலை என்ன?” என்று சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.


தொடர்ந்து துரைமுருகன் பேசும்போது, “இந்தியாவில் பல்வேறு உயர் பதவிகளை வகித்த குடும்பத்தினருக்கே இச்சட்டத்தால் பிரச்னை ஏற்படுகிறது. அப்படியெனில் சாதாரண மக்களின் நிலை என்னவாகும் என்பதுதான் எங்களுடைய கேள்வி. அடுத்து என்ன நடக்கமோ என்று தெரியாமல் அச்சமுதாய மக்கள் உயிரை கையில் பிடித்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராடும் மக்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் வாக்கு வங்கிக்காக சிலர் தூண்டுதலின் பேரில் போராடுகிறார்கள் என அமைச்சர் தெரிவிப்பது நியாயமா?” எனத் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.