கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் வேண்டுமா, வேண்டாமா.? எங்கள் நிலைப்பாடு இதாங்க.. பூவுலகின் நண்பர்கள் விளக்கம்!
கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் கடலில் வேண்டாம் என்பது மட்டுமே எங்கள் நிலைப்பாடு என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் வகையில், அவருடைய நினைவிடம் அமைந்துள்ள இடத்திலிருந்து மெரினா கடற்கரையில் 134 அடி உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசின் முடிவுக்கு தமிழ்நாட்டு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்திருக்கிறது. இந்த நினைவுச் சின்னத்தை மெரீனா கடற்க்ரையில் அமைக்க வேண்டாம் என்று சுற்றுச்சூழல் அமைப்பான பூவுலகின் நண்பர்கள் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தனர். அந்த அறிக்கையில், “ ரூ.81 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள இந்த நினைவுச் சின்னத்தை நினைவிடத்தில் இருந்து சென்றடையும் வகையில் 290 மீட்டர் தூரத்திற்கு கடற்கரையிலும், 360 மீட்டர் தூரத்திற்கு கடலிலும் என 650 மீட்டர் தொலைவிற்கு பாலம் அமைக்கப்படவுள்ளது. இந்த பேனா வடிவ நினைவுச் சின்னம் அமையவுள்ள பகுதி கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2011-ன் படி பகுதி IV(A) என வரையறுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மெரீனா கடலுக்குள் கருணாநிதி பேனா நினைவு சின்னம் வேண்டாம்.. அதற்கு பதில் நூலகம் கட்டுங்க - பூவுலகின் நண்பர்கள்
2015 பிப்ரவரி 15ம் தேதியிட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2011-ல் அறிவிக்கையில் ஒரு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்தத் திருத்தத்தின்படி CRZ IV(A) என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் விதிவிலக்கான நேரங்களில் (Exceptional cases) மட்டுமே நினைவிடங்கள் / நினைவுச் சின்னங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. CRZ IV(A) என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் விதிவிலக்கான நேரங்களில் மட்டுமே நினைவிடங்கள் / நினைவுச் சின்னங்கள் அமைக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், கருணாநிதியின் நினைவாக அமைக்கப்படும் இந்தப் பேனா வடிவ சிலை Exceptional case இல்லை. ஏற்கெனவே நினைவிடம் அமைந்திருக்கும் வளாகத்திற்குள்ளாகவே பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பதற்கு போதுமான இடமிருக்கின்ற நிலையில் கடலுக்குள் அமைப்பதை Exceptional case என்று கூற முடியாது.” என்று தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: விஜயகாந்த் பெயரில் அறிக்கை வெளியிட்ட குடும்பத்தினரே.. பேனா நினைவு சின்னம் ஏன் தெரியுமா.? திமுக எம்.பி பதிலடி!
மேலும் மாறி வரும் மெரீனா கடற்கரை, மீனவர்கள் பிரச்சினைகள் போன்றவை உள்ள நிலையில், பேனா நினைவுச் சின்னத்துக்கு மாற்றாக ‘கலைஞர் நினைவு நூலகம்’ போன்று ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மூலம் கலைஞரின் நினைவைப் போற்றலாம் என்ற முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அந்த அமைப்பு யோசனை கூறியிருந்தது. இந்நிலையில் இந்த அறிக்கை தொடர்பாக பூவுலகின் நண்பர்க்ள் அமைப்பு விளக்கம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதில், “கலைஞருக்கு நினைவுச் சின்னம் அமைப்பதை எதிர்க்கிறீர்களா என்று சிலர் கேட்கிறார்கள். நிச்சயமாக கலைஞருக்கான நினைவுச் சின்னம் வேண்டும் என்கிறோம். ஆனால், கடலில் வேண்டாம் என்கிறோம். படத்தில் உள்ளது போல், பேனாவை அவருடைய நினைவிடத்திலோ அல்லது அவர் உருவாக்கிய தலைமை செயலகத்திலோ அல்லது மதுரையில் அமைக்கப்படும் “கலைஞர் நூலகத்திலோ” அல்லது வேறு நல்ல இடத்தை தேர்வு செய்து வைக்க வேண்டும். கடலில் வேண்டாம் என்பது மட்டுமே எங்கள் நிலைப்பாடு.” என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 80 கோடி செலவில் பேனா நினைவு சின்னம்..யாருக்கு என்ன லாபம்? திமுகவை கண்டித்த விஜயகாந்த்