மெரீனா கடலுக்குள் கருணாநிதி பேனா நினைவு சின்னம் வேண்டாம்.. அதற்கு பதில் நூலகம் கட்டுங்க - பூவுலகின் நண்பர்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதிக்கு கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று பூவுலகில் நண்பர்கள் அமைப்பு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதிக்கு நினைவுச் சின்னம் கட்டும் பணிகள் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வருகின்றன. தற்போது கருணாநிதியின் நினைவிடத்திலிருந்து கடலில் 134 அடி உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சுற்றுச்சூழல் அமைப்பான பூவுலகின் நண்பர்கள், இத்திட்டத்தை கைவிடும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தமிழ் இலக்கியப் பணிகளை போற்றும் வகையில் அவரது நினைவிடத்திற்கு அருகில் கடலுக்குள் 134 அடி உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
நினைவுச்சின்னத்திற்கு அனுமதி ஜூன் 20, 2022 அன்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் அமைந்துள்ள இடத்திற்குப் பிற்பகுதியில் கடலுக்குள் 134 அடி உயரத்திற்கு பேனா வடிவ சிலை அமைப்பதற்காக CRZ அனுமதிகோரி சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்தை தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் பரிசீலித்து ஒப்புதல் வழங்கியுள்ளது. ரூ.81 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள இந்த நினைவுச் சின்னத்தை நினைவிடத்தில் இருந்து சென்றடையும் வகையில் 290 மீட்டர் தூரத்திற்கு கடற்கரையிலும், 360 மீட்டர் தூரத்திற்கு கடலிலும் என 650 மீட்டர் தொலைவிற்கு பாலம் அமைக்கப்படவுள்ளது. இந்த பேனா வடிவ நினைவுச் சின்னம் அமையவுள்ள பகுதி கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2011-ன் படி பகுதி IV(A) என வரையறுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இப்ப கலைஞருக்கு பேனா வைப்பீங்க.. நாளை ஸ்டாலினுக்கு உதய் 'விக்கு ' வைப்பாரா..?? சீமான் மரண கலாய்.
2015 பிப்ரவரி 15ம் தேதியிட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2011-ல் அறிவிக்கையில் ஒரு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்தத் திருத்தத்தின்படி CRZ IV(A) என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் விதிவிலக்கான நேரங்களில் (Exceptional cases) மட்டுமே நினைவிடங்கள்/நினைவுச் சின்னங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியும் கூட பல்வேறு நிபந்தனைகளுடன் மட்டுமே வழங்கப்படும். இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு, சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம், அபாய மதிப்பீடு ஆய்வு, பேரிடர் மேலாண்மைத் திட்டம் மற்றும் அவசரகால செயல்திட்டம் தயாரித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மூலம் பொது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்திய பின்னரே அனுமதி பெற முடியும்.
CRZ IV(A) என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் விதிவிலக்கான நேரங்களில் மட்டுமே நினைவிடங்கள் / நினைவுச் சின்னங்கள் அமைக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், கருணாநிதியின் நினைவாக அமைக்கப்படும் இந்தப் பேனா வடிவ சிலை Exceptional case இல்லை. ஏற்கெனவே நினைவிடம் அமைந்திருக்கும் வளாகத்திற்குள்ளாகவே பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பதற்கு போதுமான இடமிருக்கின்ற நிலையில் கடலுக்குள் அமைப்பதை Exceptional case என்று கூற முடியாது.
இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட்டுக்கு எனக்கு அழைப்பிதழ் வரல.. இருந்தாலும்... பெருந்தன்மையாக பேசிய தமிழிசை சவுந்திரராஜன்.!
தமிழ்நாட்டிற்கும், தமிழ் மொழிக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆற்றிய பணிகள் போற்றுதலுக்குரியது. அப்படி ஒரு தலைவரின் பெருமையைக் கடலுக்குள் நினைவுச் சின்னம் அமைத்துத்தான் போற்ற வேண்டும் என்பதில்லை. மாறாக மதுரையில் அமைக்கப்பட்டு வரும் ‘கலைஞர் நினைவு நூலகம்’ போன்று ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மூலம் கலைஞரின் நினைவைப் போற்றலாம். மேற்கூறிய விஷயங்களைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இந்த பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பூவுலகின் நண்பர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிச்சாமி பதவியே செல்லாது.. மகனை காக்க மக்களவை சபாநாயகருக்கு ஓபிஎஸ் எழுதிய கடிதம்!