Asianet News TamilAsianet News Tamil

இந்தி திணிப்பின் வாயிலாக தமிழர்களை சீண்டாதீர்கள்.. விளைவு வேற மாதிரி இருக்கும்.. எச்சரிக்கும் வேல்முருகன்.!

இந்தித் திணிப்பின் மூலம் தமிழர்களை இந்தியாவில் கட்டிப்போடுவது இயலாத ஒன்று.  எனவே, ஜிப்மர் உள்ளிட்ட ஒன்றிய அரசு நிறுவனங்களில் இனிவரும் காலங்களில் அனைத்து பதிவேடுகளும்  இந்தி மொழியில் மட்டும் தான் பராமரிக்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கை திரும்பப்பெற வேண்டும். 

Do not harass Tamils through Hindi dumping... Warns Velmurugan
Author
Pondicherry, First Published May 9, 2022, 2:43 PM IST

இந்தித் திணிப்பின் மூலம் தமிழர்களை இந்தியாவில் கட்டிப்போடுவது இயலாத ஒன்று.  எனவே, ஜிப்மர் உள்ளிட்ட ஒன்றிய அரசு நிறுவனங்களில் இனிவரும் காலங்களில் அனைத்து பதிவேடுகளும்  இந்தி மொழியில் மட்டும் தான் பராமரிக்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கை திரும்பப்பெற வேண்டும் என வேல்முருகன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக தமிழக வாழ்வரிமை கட்சியின் தலைவரும், பண்ருட்டி எம்எல்ஏவுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அரசமைப்புச் சட்டத்தில் தேசிய மொழி என்பதாக எதுவும் சொல்லப்படவில்லை என்றாலும் இந்திய அரசின் அலுவல் மொழி என்ற மேலாண்மையை பயன்படுத்தி, இந்தி தான் தேசிய மொழி, இது தான் இந்தியாவுக்குப் பொதுவான தொடர்பு மொழி என்ற பரப்பல் கடுமையாக நடந்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குனர் வெளியிட்டுள்ள ஏப்ரல் 29-ஆம் தேதியிட்ட  சுற்றறிக்கையில், ஜிப்மர் நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான பதிவேடுகள், பணி புத்தகங்கள், பணி கணக்குகள் ஆகியவற்றின் பொருள்களும், பத்தி தலைப்புகளும் முடிந்தவரை இந்தியில் மட்டும் தான் எழுதப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Do not harass Tamils through Hindi dumping... Warns Velmurugan

இந்த சுற்றறிக்கை தீவிரமாகவும், அப்பட்டமாகவும் இந்தியை திணிப்பதாக  அமைந்துள்ளன. ஜிப்மர் இயக்குனரின் இத்தகையை சுற்றறிக்கை மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. ஜிப்மர் மருத்துவ நிறுவனம் மட்டுமின்றி, தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள பெரும்பான்மையான ஒன்றிய அரசு அலுவலகங்களிலும் இதே போன்ற  உறுதிமொழி இந்திய அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவினால் பெறப்பட்டிருப்பதாகவும், அதன்படி அனைத்து ஒன்றிய அரசு அலுவலகங்களிலும் அனைத்து பதிவேடுகளும் இனி இந்தியில் மட்டும் தான் எழுதப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

Do not harass Tamils through Hindi dumping... Warns Velmurugan

ஆட்சி மொழி சட்டத்தின்படி, இந்தியாவின் மாநிலங்கள் 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ - பிரிவு மண்டலங்களில் பீகார், அரியானா, இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரகான்ட், ராஜஸ்தான், உ.பி. மற்றும் யூனியன் பிரதேசங்களான டெல்லி, அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள் (இவை இந்தி பேசும் மாநிலங்கள்). 

பி - பிரிவு மண்டலத்தில் குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் யூனியன் பிரதேசங்களான சண்டிகார், டாமன் மற்றும் டையூ, தாத்ரா மற்றும் நாகர் ஹேவலி உள்ளன. 
சி - பிரிவு மண்டலத்தில் மேற்குறிப்பிட்ட மண்டலங்களில் இடம் பெறாத மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இடம் பெற்றுள்ளன. 
ஏ - பிரிவு மண்டலங்களில் மாநில அரசின் தொடர்புகள் கட்டாயம் இந்தியில் இருத்தல் வேண்டும். ஆங்கிலத்திலும் இருக்குமானால், இந்தி மொழி பெயர்ப்போடும் இருக்க வேண்டும். பி - மண்டலத்தில் உள்ள மாநிலங்களுக்கு இடையிலான தொடர்புகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டும். 
சி -  மண்டலங்களில் உள்ள மாநிலங்களில் ஆங்கிலம் தொடர்பு  மொழியாக இருக்கும் என்று ஆட்சி மொழி சட்டம் கூறுகிறது. இப்பட்டியலில் புதுச்சேரி சி பிரிவில் வருகிறது. 

அதன்படி,  1976-ஆம் ஆண்டின் அலுவல் மொழி விதி 11(2)-ன் படி, புதுச்சேரியில் உள்ள ஒன்றிய அரசு பணிகளில் ஆங்கிலம் மற்றும் இந்தியை பயன்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில், அனைத்து பதிவேடுகளும் இனி இந்தியில் மட்டும் தான் எழுதப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம்.  
இந்த அரசியலமைப்பு சட்டவிதிகளை சற்றும் மதிக்காத ஒன்றிய அரசும், ஜிப்மர் இயக்குனரும், தமிழர்கள் மீது எப்படியாவது இந்தி, சமஸ்கிருதத்தை திணித்து விடலாம் என்று கனவு காண்கின்றனர். 

Do not harass Tamils through Hindi dumping... Warns Velmurugan

இந்தித் தேசிய இனத்தின் மேலாதிக்கத்தின் கீழ் பிற மொழிகளை அடிமைப்படுத்தும் ஆக்கிரமிப்பை ஒற்றுமை என்ற பெயரால் இந்தியை திணித்து விடலாம் என்று மோடி அரசும், ஜிப்மர் இயக்குனரும் நினைத்து இருப்பர் போலும். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை தாய் மொழியாக கொண்டு தமிழினம் என்றைக்கும் இந்தித் திணிப்பை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இந்தித் திணிப்பின் மூலம் தமிழர்களை இந்தியாவில் கட்டிப்போடுவது இயலாத ஒன்று.  எனவே, ஜிப்மர் உள்ளிட்ட ஒன்றிய அரசு நிறுவனங்களில் இனிவரும் காலங்களில் அனைத்து பதிவேடுகளும்  இந்தி மொழியில் மட்டும் தான் பராமரிக்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கை திரும்பப்பெற வேண்டும். இந்தி திணிப்பின் வாயிலாக தமிழர்களை சீண்ட வேண்டாம் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை விடுக்கிறது என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios