Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாட்டையும், உங்கள் ஆட்சியையும் கவனியுங்க முதல்வரே.! முதல்வர் ஸ்டாலினை சீண்டிய அண்ணாமலை

‘தமிழ் மொழியை  மக்களாகிய நாங்களே காப்பாற்றிக் கொள்கிறோம். தயவுசெய்து, தங்கள் ஆட்சியை கொஞ்சம்  கவனியுங்கள்’ என்று கூறியுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

Dmk raises tamil language issue reply bjp state president annamalai
Author
First Published Oct 10, 2022, 10:48 PM IST

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டாய இந்தியை புகுத்தி இன்னொரு மொழிப்போரைத் திணிக்காதீர் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் திடீர் என்று அறிக்கை விடுத்திருக்கிறார். மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக  அனுமதிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாக ஒரு தகவலை மேற்கோள்காட்டி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முதல்வரின் தமிழ்மொழி மீதான இந்த திடீர் கரிசனத்தை எண்ணி சிரிப்பதா…? அழுவதா..? என்றே தெரியவில்லை. எப்போதெல்லாம் திமுகவின் மீது மக்களுக்கு அதிருப்தி அலை வீசுகிறதோ…. எப்போதெல்லாம் ஊடகங்கள் கூட திமுகவிற்கு எதிராக பேசத் தொடங்குகின்றனவோ…அப்போதெல்லாம் மொழி பிரச்சனையை  எழுப்புவது திமுகவின் திராவிட மாடல்

Dmk raises tamil language issue reply bjp state president annamalai

எதோ வடநாட்டிலிருந்து ஒரு தீய சக்தி வந்து, தமிழை அழித்து விட போகிறது என்ற, அம்புலிமாமா மாயக் கதையை, அக்காலத்தில் நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறார்கள். இதன் மூலம் அந்த காலத்திலெல்லாம், மக்களை அவர்களால் எளிதாக திசைதிருப்ப முடிந்தது. சமூக ஊடகத்தின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில் இதுபோல மக்களை அத்தனை எளிதில் ஏமாற்றிவிட முடியாது.

உலகம் தோன்றிய காலத்திலிருந்து, எத்தனையோ ஊழிக் காலங்களை எல்லாம் கடந்து, எத்தனையோ அடக்குமுறைகளை எல்லாம் தாண்டி, தமிழ் உலகின் சிறந்த மொழியாக இன்னும் உயர்ந்து நிற்கிறது.  1957ஆம் ஆண்டில் முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்டு, ஒரு சில இடங்களை வென்ற திமுக கழகம் தான் தமிழை உலகம் தோன்றிய காலத்திலிருந்து காப்பாற்றி வந்து இருப்பது போல ஒரு மாயத் தோற்றத்தை முதல்வர் அவர்கள் உருவாக்க நினைப்பது நகைப்பிற்கிடமாக இருக்கிறது.

இதையும் படிங்க..திருமணம் ஆனவருடன் பாலியல் உறவு கொண்ட பெண்.. நீதி கேட்ட பெண்ணுக்கு கோர்ட் கொடுத்த அதிர்ச்சி தீர்ப்பு !

1957 வரை தமிழ் எப்படி அழியாமல் இருந்ததோ..! அது போல  தமிழ் மொழி தன்னைத் தானே காத்துக் கொள்ளும், கவலைப்படவேண்டாம். காலத்தால் அழிக்க முடியாத தமிழ் மொழி, திமுகவை மட்டும் நம்பியிருப்பதாக நினைக்க வேண்டாம். நீக்கள் அதைச் சிதைக்காதிருந்தால் போதும். 1967ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து ஆட்சிப்பொறுப்பில் மாறி மாறி இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம். தமிழ் மொழிக்காக என்ன செய்திருக்கிறது. ஒரு வார்த்தை கூட படிக்காத தமிழ் எழுத தெரியாத ஒரு சமுதாயத்தை உருவாக்கி இருக்கிறது. தமிழில் பேசுவது அவமானம் என்று நினைக்கும் ஒரு தமிழ் சமுதாயத்தை படைத்திருக்கிறது.

எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில், கோடிக்கணக்கான தமிழ் நூல்கள் எல்லாம், புதிய தலைமுறையால் படிக்க முடியாமல் செய்து, தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்றும் திருக்குறளை மலம் என்றும் கம்பராமாயணத்தை ஆபாச புத்தகம் என்றெல்லாம் போற்றியவரை தங்கள் தலைவராக தாங்கிப்பிடித்து ஊரெல்லாம் அவருக்கு சிலை வைத்து கொண்டாடும் திமுகவா தமிழிழைக் காக்கப் போகிறது?.

திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பதை திமுக அறியுமா? தமிழ் வளர்த்த ஆலயங்களையும், தமிழ் மொழியை காப்பாற்றிய ஆன்மீகத்தையும், மொத்தமாக அழித்தொழிக்கும் திமுகதான், நம்மொழியைக் காக்க போகிறதா? இதை நாங்கள் நம்ப வேண்டுமா?  மற்ற மாநிலங்களில் எல்லாம் தாய் மொழியை படிக்காமல் எவரும் பள்ளிக் கல்வியை முடிக்க முடியாது. ஆனால் திராவிட மாடலில் மட்டும்தான் இனிய தமிழ் மொழியை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு, இந்தி உட்பட, மற்ற மொழிகளை படித்துக்கொண்டு கல்லூரி வரைக்கும் முடிக்கும் வாய்ப்பை உருவாக்கியது திமுக.

Dmk raises tamil language issue reply bjp state president annamalai

இதனால்தான் தமிழ் மொழியே தெரியாத, தமிழை எழுத, படிக்க, பேசத் தெரியாத, புதிய திராவிட சமுதாயம் உருவாகி இருக்கிறது.  இப்படி தமிழ் மொழியையும் தமிழ் கலாச்சாரத்தையும் தமிழ் பண்பாட்டையும் தமிழின் தொன்மையையும் அழித்து ஒழித்து திராவிடத்தை முன்னிறுத்தும் காரணத்திற்காக பிறந்த  கட்சிதான் தான் திமுக.  பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகுதான் மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் ஏற்படுத்தப்பட்ட புதிய தேசியக் கல்விக் கொள்கையின் மூலம், தமிழ் கட்டாயப் பாடமாக மாற்றப்பட்டுள்ளது. 

ஆக தமிழை காத்தவர் நரேந்திரமோடி அவர்கள் தமிழை கட்டாயப் பாடமாக்கி பயிற்று மொழியாக்கியவர் பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள். சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து தமிழையே படிக்காமல், தமிழ்நாட்டில் பள்ளிகளில் படிக்க முடிந்த இழிவான சூழ்நிலையை மாற்றி, தமிழ் மொழியை கட்டாயப் பாடமாகமட்டுமல்ல, பயிற்று மொழியாகவும், அமைத்துத்தந்த  மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு தமிழகம், என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

இதையும் படிங்க..வெறும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஏதோ எந்த பிரச்சனையும் இல்லாதது போலவும், தமிழுக்கு மட்டும்தான் தனிப் பெரும் ஆபத்து திடீரென்று வந்து விட்டது போலவும், ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி, மக்கள் இன்னமும் அறியாமையில் தான் இருக்கிறார்கள் என்ற அசட்டு நம்பிக்கையில் இருப்பதை உணர்த்துகிறது, முதல்வர் அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை. பட்டியலினத்தவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பாடுபடுகிறோம் என்று சொல்லும் திமுகவில் கடந்த 50 ஆண்டு காலத்தில் தலைமைப் பொறுப்புகளுக்கு ஏன் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட  சமுதாயச் சகோதரர்கள், கல்வியில் சிறந்த கனவான்கள் யாரும் கிடைக்கவில்லையா?

Dmk raises tamil language issue reply bjp state president annamalai

தோன்றிய காலத்திலிருந்து சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக, அண்ணாவிற்கு பிறகு, இரண்டே தலைவர்கள், அதுவும் தந்தையும் மகனும் கட்சியை கைப்பற்றி இருக்கிறார்கள். ஆனால் எங்கள் பாரதிய ஜனதா கட்சியில் 40 ஆண்டுகளில், அனைத்துச் சமுதாயத்திலிருந்தும் 11 புதிய தலைவர்கள் உருவாகியிருக்கிறார்கள். இவர்களில் யாரும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் எவரும் கிடையாது. சமூக நீதி காத்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும், திமுகவில் தாழ்த்தப்பட்டவரோ, பிற்படுத்தப்பட்டவரோ, தலைவராக முடியாது என்பது அனைவருக்கும் தெரியும், உண்மை என்னவென்றால் அவர்களால், தலைமைப் பதவிக்கு மனு செய்யக்கூட முடியாது.

கோபாலபுரத்தின் குடும்பச் சொத்தான கட்சியில், அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தலில், தன்னை யாரும் கேள்வி கேட்டு விடக் கூடாது என்ற எண்ணத்தில் மக்களையும், ஊடகத்தையும் திசை திருப்ப, முதல்வர் முயற்சி செய்திருக்கிறார் போல…   மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அன்புடன் ஒரு ஆலோசனை, தமிழக மக்களை நீங்கள் தவறாக எடை போட வேண்டாம். அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும், தமிழை அரசியலுக்காக யார் பயன்படுத்துகிறார்கள். தமிழ் மொழியை, உண்மையில் யார் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்றெல்லாம் மக்கள் அறிந்திருக்கிறார்கள்.

தமிழக மக்களின் தலையிலே மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, உயர்வு விலை உயர்வு, என்று பல்வேறு விதமான உயர்வுகளை எல்லாம் ஏற்றி வைத்து தற்போது தொழில் வரியையும் உயர்த்தப் போவதாக கேள்விப்பட்டோம். சொன்ன வாக்குகளைத்தான் நிறைவேற்றவில்லை, கொஞ்சம் வரிகளையாவது, மக்களின் வலிகளுக்காக குறைக்கலாமே…!  தயவுசெய்து மக்களையும் கொஞ்சம் கவனியுங்கள். 

நீங்கள் முதல்வராக இருக்கும் இந்த காலத்தில் தான் மக்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை  மறந்துவிடாதீர்கள்.  தமிழர்களின் அடையாளமாகிய எங்கள் திருக்கோவில்களையும் எங்கள் தாய்மொழியாகிய தமிழ் மொழியையும் மக்களாகிய நாங்களே காப்பாற்றிக் கொள்கிறோம். தயவுசெய்து, கவலைக்கிடமாக இருக்கும், தங்கள் ஆட்சியையும், தமிழ் நாட்டையும்,  கொஞ்சம்  கவனியுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க..ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருஷம் ஆச்சு.. தீபாவளி வாழ்த்து சொல்லவே இல்லை.! திமுகவை வம்புக்கு இழுக்கும் பாஜக

Follow Us:
Download App:
  • android
  • ios