திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் செல்போன் திருட்டு.. திமுக விழாவில் திருடர்கள் கைவரிசை.!!
டெல்லி திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் கலந்துகொண்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியனின் விலை உயர்ந்த செல்போன் பறிபோன குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் அண்ணா - கலைஞர் அறிவாலயம் :
டெல்லி திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த டி.ராஜா, சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்துக் கொண்ட திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் செல்போன் திருடப்பட்டுள்ளது. அவரது கைப்பையில் வைத்திருந்த விலையுயர்ந்த ஐபோன் விழாவின் போது திருடப்பட்டுள்ளது.
தமிழச்சி தங்கபாண்டியன் செல்போன் திருட்டு :
தமிழக முதல்வர், காங்கிரஸ் தலைவர் சோனியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்ட விழாவில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதனையும் மீறி, திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியனின் செல்போன் திருடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திறப்பு விழாவில் கலந்து கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர்கள் யாரும் அவரது கைப்பையில் வைத்திருந்த விலை உயர்ந்த ஐபோனை எடுத்துச் சென்றார்களா அல்லது வேறு எங்கும் மாயமானதா என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை. ஆனாலும் செல்போன் மாயமானதாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.