புரோகிதர் இல்லாத இந்து திருமணங்கள்.. தமிழகம் கெத்து.. மக்களவையில் திமுக எம்.பி. அதிரடி கோரிக்கை!
சுய மரியாதை திருமணங்கள் 1928- ஆம் ஆண்டு முதலே நடைமுறையில் இருந்தாலும், புரோகிதர்கள் இல்லாமல் நடத்தப்படும் இந்து திருமணங்களை சட்டப்பூர்வமாக்கிய முதல் மாநிலம் தமிழ்நாடுதான்.
இந்தியா முழுவதும் சுய மரியாதை திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பேசினார்.
திருமணத்தில் தேவையற்ற சடங்குகள்
மக்களவையில் பூஜ்ய நேரத்தில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் சுய மரியாதை திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக பேசினார். இதுதொடர்பாக தமிழச்சி பேசுகையில், “சுய மரியாதை இயக்கத்தின் மூலம் நடந்த முக்கிய சமூக மாற்றங்களில் ஒன்று, சுய மரியாதை திருமண முறை ஆகும். வழக்கமாக நடைபெறும் திருமணங்களில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த புரோகிதர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். திருமணத்தில் புரோகிதர்கள் தேவையற்ற சடங்குகளை வற்புறுத்துகிறார்கள். இதைச் செய்வதற்காக குடும்பங்கள் கடன் வலையில் சிக்குகின்றன.
சுய மரியாதை திருமணங்களுக்கு அங்கீகாரம்
பிராமண புரோகிதர்கள் இல்லாமல் திருமணங்களை நடத்தினால் மட்டுமே தேவையற்ற சடங்குகளையும் செலவுகளையும் தவிர்க்க முடியும் என்று நினைத்துதான் சுய மரியாதை திருமணங்களை பெரியார் பரிந்துரைத்தார். இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில்தான் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவால் சுய மரியாதை திருமணங்களுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டது. மேலும், சுய மரியாதை இயக்கங்கள்தான் சாதிகளுக்கு இடையிலான திருமணங்களையும் விதவை மறுமணங்களையும் ஊக்குவித்தன. 11 வயதிலேயே விதவையான சிவகாமி அம்மையார் போன்றோர் மறுமணக் கொள்கையால் புதுவாழ்வு பெற்றார்.
தமிழ்நாடு முதல் மாநிலம்
சுய மரியாதை திருமணங்கள் 1928- ஆம் ஆண்டு முதலே நடைமுறையில் இருந்தாலும், பிராமண சமூகத்தைச் சேர்ந்த புரோகிதர்கள் இல்லாமல் நடத்தப்படும் இந்து திருமணங்களை சட்டப்பூர்வமாக்கிய முதல் மாநிலம் தமிழ்நாடுதான். இந்தியாவில் நமிதா திருமண அமைப்பின் கீழ் சுய மரியாதை திருமணங்களை நாடு முழுவதும் அங்கீகரிக்க வேண்டும்” என்று தமிழச்ச்சி தங்கபாண்டியன் கோரிக்கை விடுத்தார்.