கிட்னியை திருடிய பணத்தில் திமுக எம்.எல்.ஏ., கதிரவன் Rolls-royce காரில் வலம் வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.

நாமக்கல் மாவட்டத்தில், ஏழை, மக்கள் தங்கள் கடன் பிரச்சனைகளைத் தீர்க்க புரோக்கர்களின் தூண்டுதலின் பேரில் சட்ட விரோதமாக கிட்னியை விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. முறைகேடாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ததாக திருச்சி சிதார் மருத்துவமனை, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதை அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை ரத்து செய்தது.

இதனை அடுத்து கிட்னியை திருடிய பணத்தில் திமுக எம்.எல்.ஏ., கதிரவன் Rolls-royce காரில் வலம் வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், கதிரவன் மக்களுடன் எம்.எல்.ஏ நிகழ்ச்சிக்காக திருப்பத்தூர் பகுதிக்குச் சென்றார். அப்போது திமுக நிர்வாகி ஒருவர் கிட்னி திருட்டு விவகாரம் குறித்து எம்.எல்.ஏ., கதிரவனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கதிரவன் சிரித்துக் கொண்டே, ‘‘கிட்னியா.. வாங்க வாங்க கிட்னியை எடுத்துக் கொள்ளலாம் வாங்க.. எப்போது காசு கம்மியாக இருக்கிறதோ அப்போது கிட்னியை எடுத்து விடுவோம்’’ என்று ஜாலியாக பதில் அளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘‘ கிட்னி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் சர்ஜன் மூன்று பேர், நியூராலஜி டாக்டர் ஒருவர், ஒரு மயக்க மருந்து டாக்டர் என மொத்தம் ஐந்து டாக்டர்கள் இருக்க வேண்டும். மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய 15 பேர் வேண்டும். இப்படி இருக்கையில் யாரையாவது நான் கூட்டி போய் கிட்னி ஆபரேஷன் செய்துவிட முடியுமா? அதற்கு மூன்று அனுமதி வாங்க வேண்டும். இவர் தான் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார் என்றால் அவரை மதுரைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களை கூட்டி செல்வதற்கு முன் தாசில்தார், ஓய்வு பெற்ற நீதிபதி, டி.ஆர்.ஓ, போலீஸ் கமிஷனர், மதுரை மெடிக்கல் காலேஜ் டீன் என அனைவரும் சேர்ந்து அனுமதி கொடுப்பார்கள்.

அந்த அனுமதியை வாங்கிக்கொண்டு மீண்டும் நான் சென்னைக்கு செல்ல வேண்டும். சென்னையிலும் அதே போன்று கமிட்டியிடம் அனுமதி வாங்க வேண்டும். இதையெல்லாம் பெற்ற பிறகு தான் கிட்னி அறுவைச் சிகிச்சை செய்ய முடியும். ஒரு கிட்னி அறுவை சிகிச்சைக்கு 10 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் வரை கட்டணம் வாங்குவோம். எனக்கு இரண்டு முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். என் அப்பாவின் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை 14 கோடி ரூபாய். நாங்கள் செய்த மொத்த அறுவை சிகிச்சை 252. எனக்கு ஒரு அறுவை சிகிச்சைக்கு இரண்டு லட்சம் ரூபாய்தான் கிடைக்கும் என்றால் நான் எப்போது Rolls-royce காரை வாங்குவது?

திருப்பத்தூரில் உள்ள அனைவரது கிட்னியையும் கழட்டினால் தான் Rolls-Royce கார் வாங்க வேண்டும் முடியும். எனக்கு என்ன ஒரே வருத்தம் என்றால் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 252 பேரின் உயிரை காப்பாற்றி இருக்கிறேன். இது குறித்து யாரும் பேசவில்லை. சொல்லப்போனால் கிட்னி அறுவை சிகிச்சையால் 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை. நான் மெடிக்கல் காலேஜ் நடத்துவதால் அதை ஒரு சர்வீஸாகச் செய்கிறேன். சம்பாதிப்பதற்கு ஆயிரம் வழி இருக்கிறது. நான் ஏன் மற்றவர்கள் கிட்னியை எடுக்க வேண்டும்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.