பல அதிரடி நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் எடுத்த நிலையிலும், கட்சி நிர்வாகிகள் தங்கள் வேலையைக் காட்டிவிட்டதாக திமுகவினர் மத்தியில் சலசலப்பு எழுந்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் சேலத்தில் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு திமுக மாவட்ட நிர்வாகிகள் சீட்டு ஒதுக்கியதாக உள்ளூரில் பாதிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் கட்சித் தலைமைக்கு புகார்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்குப் பிறகு, அவரைப் போல ஒருவர் உருவாகவில்லை. அந்த இடத்தை நிரப்ப திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் என்னவெல்லாமோ செய்து பார்க்கிறார். முதலில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அனுப்பினார். இப்போது கே.என்.நேரு, சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிரடி அரசியலில் பழுத்த அனுபவம் பெற்ற நேருவுக்கும்கூட, சேலம் கள அரசியல் கைகூடவில்லை என்கிறார்கள். வீரபாண்டி ஆறுமுகம் இருந்த வரை சேலத்தில் திமுக சற்று ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், அதனை மீட்க திமுக தலைமை திட்டமிடும் செயல்பாடுகள் எதுவும் பலனளிக்கவில்லை என்று சேலம் உடன்பிறப்புகள் புலம்புகிறார்கள்.

2016 சட்டமன்ற தேர்தலைத் தொடர்ந்து 2021 சட்டமன்றத்தேர்தலிலும் திமுக கூட்டணியை சேலம் வாரிவிட்டது. 2021-இல் திமுக ஆட்சியைப் பிடித்தபோதும் மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளை இழந்தது. எனவே, நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டலத்தில் பெருவாரியான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை கைப்பற்றியே ஆக வேண்டும் என தீவிரமாக களமிறங்கி உள்ளது திமுக. இதன் எதிரொலியாகவே சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் மூத்த அமைச்சர்களை கூடுதல் பொறுப்பு அமைச்சராக அந்தந்த மாவட்டத்திற்கு நியமித்து அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க மற்றும் கட்சி சார்ந்த பிரச்சினைகளை சுமூகமாக நடத்த முடிவு செய்ய முதல்வர் உத்தரவிட்டு இருந்தார்.

இப்படி பல அதிரடி நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் எடுத்த நிலையிலும், கட்சி நிர்வாகிகள் தங்கள் வேலையைக் காட்டிவிட்டதாக திமுகவினர் மத்தியில் சலசலப்பு எழுந்துள்ளது. சேலத்தில் கட்சி நிர்வாகிகள் வேண்டியவர்களை உள்ளாட்சி தேர்தல் வேட்பாளராக அறிவிக்க, கட்சிக்காரர்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாமல் திமுகவினரே சுயேச்சை வேட்பாளராக பலர் களம் இறங்கி தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதுதொடர்பாக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது கட்சி தலைமைக்கு புகார்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கட்சி வேட்பாளர், கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டவர்களை கட்டம் கட்டி கட்சி தலைமை நீக்கி வருகிறது.

கிழக்கு, மத்திய, மேற்கு மாவட்ட செயலாளர்கள் இதுவரை எத்தனையோ புகார்களுடன் ஆதாரத்துடன் சிக்கியுள்ளனர். அனைத்தும் ஆதரப்பூர்வமாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த புகார்களின் மீதான நடவடிக்கை உள்ளாட்சி தேர்தல் முடிவுக்கு பிறகு உறுதியாக முதல்வர் மு.க.ஸ்டாலினால் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கலாம் என்கின்றனர் உடன்பிறப்புகள்.
இதுகுறித்து சேலத்தை சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர்க் கூறுகையில், ‘’சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே.என்.நேருவும், சேலத்தில் நடக்கும் கட்சி விஷயங்களை முதல்வரின் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளார். அதிலும் முதல்வருக்கு ஏமாற்றமே.
சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கட்சியின் தொழிற்சங்கத்தில் செய்த அட்ராசிட்டிகள், டாஸ்மாக் பார் எடுப்பதில் உள்கட்சிகாரர்களிடேமே கறார். உள்ளாட்சி தேர்தலில் சீட் ஒதுக்குவதில் பேரம், அதிகாரிகளை கைக்குள் வைத்து கரண்சி தேடுவது என தொடர்ந்து புகார்கள் எனத் தொடந்து முதல்வரின் கவனத்திற்கு வந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்தின் மீதும் திமுகவினர் புகார் வாசிக்கிறார்கள். மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த போதும் எஸ்.ஆர்.சிவலிங்கத்தின் மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகளே இப்போதும் அடுக்கப்படுகிறது. மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார் மு.க.ஸ்டாலின். ஆனால் அந்த நம்பிக்கியை தவிடுபொடியாக்கி விட்டார் செல்வகணபதி.
நான் என்றைக்கும் கட்சிக்காக உண்மையாக இருக்கிறேன் என்று கூறிக்கொள்ளும் செல்வக்கணபதி, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதில் வேட்பாளர்களிடம் வசூல் வேட்டை நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.
இத்தனை புகார்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் மீது இருந்தும் தலைமை நடவடிக்கைகள் மேற்கொள்ள தயங்குவது நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பற்றி தான். தேர்தல் முடிவுகள் வந்தவுடன் மாவட்ட செயலாளர்கள் பதவி பறிப்பு நடக்க இருக்கிறது’’ என்கிறார்கள்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள பொறுப்பாளர்கள் வேட்பாளர் தேர்தலில் பல தில்லுமுள்ளுகளை செய்துள்ளனர். ஆகவே இந்த முறையும் திமுக வெற்றி என்பது கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது என்கிற தகவல் திமுக தலைமைமைக்குக்கும் சென்று இருக்கிறது. அப்படி நடந்தால் உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு சேலம் திமுகவில் அதிரடி களையெடுப்புகள் நடைபெறும் என்கிறார்கள்.
