தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை..! புறக்கணிக்க திமுக கூட்டணி கட்சிகள் திடீர் முடிவு.?
தமிழக ஆளுநரை கண்டிக்கும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் நாளை ஆளுநர் உரையை புறக்கணிக்க திமுக கூட்டணி கட்சிகள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டம்
தமிழக சட்டபேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் ஜனவரி மாதம் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நாளை காலை {9ம்தேதி} கூடுகிறது. காலை 10 மணிக்கு கூடும் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துகிறார். சட்டபேரவைக்கு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை தலைமைச் செயலக வளாகத்தில் சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்ப்பார். இதனையடுத்து ஆளுநர் ஆர் என் ரவியை சபாநாயகர், சட்டசபை செயலாளர் ஆகியோர் சட்டசபை மண்டபத்திற்கு அழைத்து வருவார். இதனையடுத்து தமிழக அரசின் திட்டங்கள் தொடர்பாக உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்துவார். இதன் தமிழ் மொழி பெயர்ப்பை சபாநாயகர் அப்பாவு நிகழ்த்துவார்.
ஆளுநர் உரை- புறக்கணிக்க திட்டம்
இந்தநிலையில் தமிழக ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. அரசு நிகழ்வில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை வெளிப்படுத்துவதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் நீட் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என அழைப்பது தான் சரியாக இருக்கும் என ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் தமிழக ஆளுநரின் உரையை புறக்கணிக்க திமுக கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திராவிட கொள்கைக்கு எதிரானவர் ஆர்.என்.ரவி..! சட்டப்பேரவையில் உரையாற்ற தகுதியில்லை- திருமாவளவன் ஆவேசம்
திமுக கூட்டணி கட்சிகள் முடிவு.?
அந்தவகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்றைய தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சந்தித்து பேசினார். அப்போது ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக ஆலோசித்தார். அப்போது ஆளுநர் உரையை புறக்கணிக்க இருப்பது தொடர்பான தகவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தமிழக சட்டப்பேரவையில் உரையை படிக்க ஆளுநருக்கு தகுதியில்லையென தெரிவித்திருந்தார். எனவே தமிழக சட்டபேரவையில் ஆளுநர் உரையை திமுகவின் கூட்டணி கட்சிகள் புறக்கணிக்க இருப்பதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்
கருணாநிதி மன்னிப்பு கேட்டதை நினைவுபடுத்திய துரைமுருகன்..! தேம்பி தேம்பி அழுத டி.ஆர் பாலு