பெரியார் பற்றி பேசிய விவகாரத்தில் ரஜினி வெறும் அம்புதான். யாரோ அவரை பின்னணியிலிருந்து இயக்குகின்றனர் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விமர்சித்துள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் நலம் பெற வேண்டி, தை அமாவாசையையொட்டி தேமுதிக பொருளாளர் பிரேமலதா திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீரராக பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் பிரேமலதா செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் பெரியார் பற்றி ரஜினி தெரிவித்த கருத்துகள் பற்றி கேள்வி எழுப்பினர்.

 
“துக்ளக் விழாவில் பெரியாரை பற்றி பேசியதை நடிகர் ரஜினி தவிர்த்திருக்கலாம். பெரியார் யார் என்று தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்த உலகத்துக்கே தெரியும். அவர் சரித்திரமாய் இருந்து சகாப்தம் படைத்த மனிதர். பொதுவாக இன்றைய அரசியல் சூழ்நிலையில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பற்றி பேச வேண்டும்.  அதைவிடுத்து பெண்ணுரிமைக்காக போராடிய பெரியார் பற்றி  துக்ளக் விழாவில் ரஜினி பேசியது தவறு. 
துக்ளக் இதழை பற்றி மட்டும் ரஜினி பேசி இருக்கலாம். பெரியார் பற்றி பேசியதை ரஜினி தவிர்த்திருக்க வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் அவர் வெறும் அம்புதான். யாரோ அவரை பின்னணியிலிருந்து இயக்குகின்றனர்” என்று பிரேமலதா தெரிவித்தார்.