வட இந்தியாவில் பின்பற்றப்படும் தேர்தல் பணியைத் தமிழகத்திலும் பின்பற்ற தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு டெல்லி மேலிடம் ஆலோசனைகளை வழங்கியிருக்கிறது.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஐந்து தொகுதிகளையும் எப்படியும் வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாஜக திட்டங்களை வகுத்து வருகிறது. மேலும் கூட்டணி கட்சிகளும் கணிசமாக வெற்றி பெற வேண்டும் என்றும் தமிழகத்திலிருந்து குறைந்தபட்சம் 25 தொகுதிகளிலாவது கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றும் பாஜக எதிர்பார்க்கிறது.

 

அதற்கேற்ப பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை பாஜக மேலிடம் தமிழக பாஜகவுக்கு வழங்கி வருகிறது. வட இந்தியாவில் தேர்தல் பணிகளில் சமூக வலைத்தளங்களுக்கு பாஜக அதிக முக்கியத்துவம் கொடுக்கும். அதே பாணியை அச்சுபிசகாமல் தமிழகத்திலும் பின்பற்ற டெல்லி மேலிடம் யோசனைகளை வழங்கியிருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் சமூக ஊடகங்களில் பாஜகவினர் தீவிரம் காட்டிவந்தாலும், இன்னும் அந்தப் பணிகளை துரிதப்படுத்த மேலிடம் உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதுதொடர்பாக தமிழக, பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுக்கு டெல்லி மேலிடம் தேர்தல் தொடர்பாக சில பணிகளை வழங்கி மிக விரைவாக முடிக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது. இதன்படி ஃபேஸ்புக், வாட்ஸ்அப் குழுக்களை மாவட்ட, மண்டல அளவில் இணைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தல் பணிக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் 2,500 பேரை தேர்வு செய்து தனியா தனியாகக் குழு அமைக்க வேண்டும் என்றும் தமிழக தகவல் தொழில்நுட்ப அணிக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சமூக வலைதளங்களில் பாஜகவை விமர்சிப்பவர்களுக்கு உடனுக்குடன் பதிலடி தர வேண்டும், மோடி அரசின் சாதனைகளை தெரிவிக்க வேண்டும்; தமிழகத்தில் பாஜக ஆட்சியில் கிடைத்த நன்மைகளை பட்டியலிட வேண்டும் என்று அந்த யோசனையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் இந்தப் பாணியைத்தான் பாஜக கடைபிடித்தது. இந்தப் பணி தமிழகத்திலும் பலன் அளிக்கும் என்று பாஜக தலைமை எதிர்பார்க்கிறது.