கடந்த 3 ஆண்டுகளில் தேசிய கட்சிகள் பெற்ற கோடிக்கணக்கான நன்கொடையில் 93 சதவீத தொகையை கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
அரசியல் கட்சிகள், கட்சி செலவுக்காக நன்கொடைகள் திரட்டுவது வழக்கம். பெரும் வர்த்தக நிறுவனங்களிடம் அரசியக் கட்சிகள் அதிகம் நிதி பெறும். கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டுவரை 3 ஆண்டுகளில் தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடைகள் குறித்து ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு (ஏடிஆர்) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “கடந்த 3 ஆண்டுகளில் 6 தேசிய கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடையில் 93 சதவீத தொகையை கார்ப்பரேட் நிறுவனங்களே வழங்கியுள்ளன.  குறிப்பாக கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 1059 கோடி ரூபாய் நன்கொடை தாமாக முன்வந்து கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில் மிக அதிகபட்சமாக பாஜக  1,731 கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து 915 கோடி ரூபாயை  நன்கொடையாகப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 151 கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து 55 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி  7.74 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற்றுள்ளது. 2016 - 17, 2017 - 18 ஆகிய நிதி ஆண்டுகளில் மட்டும் தாமாக முன்வந்து கார்ப்பரேட் நிறுவனங்களும் பிற வர்த்தக நிறுவனங்களும் பாஜகவுக்கு 94 சதவீதம் பேரும், காங்கிரஸ் கட்சிக்கு 81 சதவீதம் பேரும் நன்கொடை அளித்துள்ளார்கள். கம்யூனிஸ்ட் கட்சியும் கார்ப்பரேட்டுகளிடமிருந்து 2 சதவீதம் நன்கொடை பெற்றுள்ளது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012 முதல் 2018-ம் ஆண்டுவரை தேசிய கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து சென்ற நன்கொடை 414 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புருடன்ட் சத்யா எல்க்டோரல் டிரஸ்ட் என்ற அறக்கட்டளை  மட்டும் அதிகபட்சமாக பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் அதிகளவில் நன்கொடை அளித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இக்கட்சிகளுக்கு 429.42 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.