அதானியின் “காட்டுப்பள்ளி துறைமுக” விரிவாக்கத் திட்டம் தேவையற்ற திட்டம். இதன் நோக்கம் சென்னை, எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்களை மூடவைப்பதுதான் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.  இது குறித்து அந்த அமைப்பு கூறியிருப்பதாவது. கொரோனா காலகட்டத்திற்கு முன்னுள்ள துறைமுக பயன்பாட்டு தரவுகளை வைத்து பார்க்கும்போது இந்த சந்தேகம் உறுதியாகிறது.  தமிழகத்தில் உள்ள மூன்று பெரிய துறைமுகங்களின் சரக்குகளை கையாள்வதற்கான கூட்டுதிறன் வருடத்திற்கு 274.9 மில்லியன் டன்கள். 

ஆனால் 2019-20ல் இந்த மூன்று துறைமுகங்களும் சேர்ந்து கையாண்டது 122.3மி.டன்கள். அதாவது 44% மட்டுமே.ஏற்கனவே உள்ள துறைமுகங்களின் நிலையே இப்படி இருக்கும் போது காட்டுப்பள்ளி துறைமுகம் 320மி.டன்களை கையாளும் வகையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதாவது இந்தியாவில் உள்ள அனைத்து துறைமுக கையாளும் திறனில் இது ஆறில் ஒரு பங்கு. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள கூட்டு திறனைவிட 20%க்கும் கூடுதல். 

அப்படியெனில் அதானி துறைமுகம் வெற்றிபெறவேண்டுமெனில் மற்ற துறைமுகங்கள் கையாளும் சரக்கு இங்கே திருப்பிவிடப்பட வேண்டும். எனவே தமிழக மக்களே, இந்திய மக்களே, நம் வரிப்பணத்தில் கடந்த பல பத்தாண்டுகளாக உருவாக்கப்பட்ட துறைமுகங்களை மூடப்போகும் திட்டத்தை நீங்கள் எதிர்ப்பீர்களா? தமிழகத்தில் உள்ள அனைவரும் சேரந்து எதிர்க்கவேண்டிய திட்டம் இது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.