சமூகநீதிக்கு சாவுமணி.. இட ஒதுக்கீட்டை நேரடியாக ஒழிப்பதற்கான சதி.. அலறும் ராமதாஸ்..!
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் தகுதியானவர்களை வெளியேற்ற கிரீமிலேயர் மிகப்பெரிய ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.
பல்கலைக்கழக மானியக்குழுவின் இந்த நடவடிக்கை சமூகநீதிக்கு சாவுமணி அடிப்பதற்கான செயல் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை என ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்பும் போது, பிற பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினம், பழங்குடியினரில் தகுதியானவர்கள் கிடைக்கா விட்டால், அப்பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு, பொதுப்பிரிவினரைக் கொண்டு அந்த இடத்தை நிரப்புவதற்கு அனுமதிக்க பல்கலைக்கழக மானியக்குழு முடிவு செய்திருக்கிறது. இது உயர்கல்வி நிறுவன வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை நேரடியாக ஒழிப்பதற்கான சதி ஆகும்.
இதையும் படிங்க;- எதுக்கு தயங்குறீங்க! அவங்களால முடியும்போது நம்மால முடியாதா? பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துங்க! ராமதாஸ்.!
ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், மத்தியப் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்பும் போது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் உள்ளிட்டோருக்கான இட ஒதுக்கீட்டை எத்தகைய தருணங்களில் ரத்து செய்யலாம் என்பதற்கான வரைவு விதிகளை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்பும் போது, ஏதேனும் ஒரு பணியிடத்தை நிரப்ப தகுதியான ஆட்கள் கிடைக்கவில்லை என்றால், அப்பணியிடத்திற்கான இட ஒதுக்கீட்டை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் ரத்து செய்து கொள்ளலாம். அதன் பின்னர் அந்த இடத்தை பொதுப்பிரிவுக்கு மாற்றி தகுதியானவர்களைக் கொண்டு நிரப்பலாம் என்று யு.ஜி.சி அறிவித்துள்ளது. இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் பணியிடம் சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்ததாக இருந்தால், அது தொடர்பான முடிவை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக செயற்குழுவே எடுத்துக்கொள்ளலாம்; ஏ மற்றும் பி பிரிவைச் சேர்ந்ததாக இருந்தால் அது குறித்து மத்திய அரசின் உயர்கல்வி அமைச்சகத்தின் அனுமதி பெறப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழுவின் வரைவு விதிகளில் கூறப்பட்டிருக்கிறது.
இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்கான இந்த வரைவு விதிகள் குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட இதில் தொடர்புடைய பல்வேறு தரப்பினரிடம் பல்கலைக்கழக மானியக்குழு கருத்துகளைக் கேட்டிருக்கிறது. பல்வேறு தரப்பிலிருந்தும் பெறப்பட்ட கருத்துகளை ஆய்வு செய்து இறுதி விதிகளை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிடவுள்ளது. அவ்வாறு இறுதி விதிகள் வெளியிடப்பட்டால், மத்திய உயர்கல்வி நிறுவன வேலைவாய்ப்புகளில் ஒழிக்கப்பட்டு விட்டதாக பொருள் கொள்ள முடியும்.
பல்கலைக்கழக மானியக்குழுவின் இந்த நடவடிக்கை சமூகநீதிக்கு சாவுமணி அடிப்பதற்கான செயல் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு 33 ஆண்டுகளும், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு 75 ஆண்டுகளும் நிறைவடைந்து விட்ட நிலையில், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் பிரதிநிதித்துவம் இன்னும் ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணியிடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு பதிலாக, ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாக, 0.77% மட்டும் தான் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல், இணைப் பேராசிரியர் பணிகளில் 1.39%, உதவிப் பேராசிரியர் பணிகளில் 16% இடஒதுக்கீடு கிடைத்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டியில் 2021 மார்ச் நிலவரப்படி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் என மொத்தம் 596 ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 62 பேர், அதாவது 10.40% மட்டும் தான். பட்டியலினத்தவர் எண்ணிக்கை 16, அதாவது 2.68% மட்டும் தான். பழங்குடியினரின் எண்ணிக்கை மூவர், அதாவது அரை விழுக்காடு தான். பேராசிரியர்கள் பணியிடங்களை மட்டும் எடுத்துக் கொண்டால், மொத்தமுள்ள 308 பணியிடங்களில் ஒன்று மட்டுமே பழங்குடியினருக்கு கிடைத்துள்ளது. இது வெறும் 0.32% தான். இந்தியாவிலுள்ள மற்ற ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்களின் நிலையும் இத்தகையதாகவே காணப்படுகிறது.
மத்திய உயர்கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு இட ஒதுக்கீட்டுப் பிரிவினரில் தகுதியானவர்கள் இல்லை என்று கூறமுடியாது. மாறாக, தகுதியானவர்களை மத்திய உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்கள் பல்வேறு சதிகளைச் செய்து வெளியேற்றுகின்றன. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் தகுதியானவர்களை வெளியேற்ற கிரீமிலேயர் மிகப்பெரிய ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.
எந்தவித சட்ட ஆதரவும் இல்லாமல் தான் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் மறுத்து வந்தன. இப்போது பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகள் நடைமுறைக்கு வந்தால், அதைப் பயன்படுத்தி, மத்திய உயர்கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு முற்றிலுமாக மறுக்கப்படும். சமூகநீதிக்கு எதிரான பல்கலை. மானியக்குழுவின் விதிகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.
இதையும் படிங்க;- வரும் மக்களவைத் தேர்தலில் டிடிவி. தினகரன் போட்டியா? எந்த தொகுதியில்? அவரே சொன்ன தகவல்..!
உயர்கல்வி நிறுவனப் பணிகளுக்கு இடஒதுக்கீட்டுப் பிரிவினரில் தகுதியானவர்கள் கிடைக்காவிட்டால், அந்தப் பணிகளை பின்னடைவுப் பணியிடங்களாக அறிவித்து சிறப்பு ஆள்தேர்வின் மூலம் நிரப்புவது தான் சமூகநீதியின் அடிப்படை ஆகும். அதற்கு மாறாக, தகுதியானவர்கள் இல்லை என்று அறிவித்து இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது மிகப்பெரிய சமூக அநீதியாகிவிடும். எனவே, இந்த சிக்கலில் மத்திய அரசு தலையிட்டு, பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளை திரும்பப்பெறச் செய்ய வேண்டும். அத்துடன், இடஒதுக்கீட்டுப் பிரிவினரில் தகுதியானவர்கள் கிடைக்காவிட்டால், அந்தப் பணிகளை பின்னடைவுப் பணியிடங்களாக அறிவித்து சிறப்பு ஆள்தேர்வின் மூலம் நிரப்புவதை கட்டாயமாக்க வேண்டும். ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு தடையாக இருக்கும் கிரீமிலேயர் முறையை நீக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.