Asianet News TamilAsianet News Tamil

எதுக்கு தயங்குறீங்க! அவங்களால முடியும்போது நம்மால முடியாதா? பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துங்க! ராமதாஸ்.!

கடந்த சில மாதங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்திய ஆறாவது மாநிலம் என்ற பெருமையை கர்நாடகம் பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் பழைய  ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கக்கூட அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது. 

old pension scheme also came in Karnataka.. When will it come to Tamil Nadu? Ramadoss tvk
Author
First Published Jan 26, 2024, 9:04 AM IST

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தயங்குவது ஏன்? என தெரியவில்லை என ராமதாஸ் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கர்நாடக அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கடந்த சில மாதங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்திய ஆறாவது மாநிலம் என்ற பெருமையை கர்நாடகம் பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் பழைய  ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கக்கூட அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது. 

இதையும் படிங்க;- திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் தலித் மாணவி சித்திரவதை.. ஒருத்தரையும் சும்மாவிடக்கூடாது.. கொந்தளிக்கும் ராமதாஸ்.!

கர்நாடக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிக்கையில், கர்நாடகத்தில் 2006ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்கு முன்பாக அறிவிக்கை செய்யப்பட்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு, 2006ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைவரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி கர்நாடகத்தில் 11,300 பேர் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர தகுதி பெற்றுள்ளனர். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவைத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. அதை நிறைவேற்ற வேண்டும் என்று அம்மாநில அரசு ஊழியர் சங்கத்தினர், கடந்த சில நாட்களுக்கு முன் முதலமைச்சர்  சித்தராமைய்யாவை சந்தித்து வலியுறுத்தியிருந்தனர். இந்த நிலையில் தான் கர்நாடக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் கர்நாடக மாநில அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களில் இராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில், பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.  இந்த மாநிலங்களைத் தொடர்ந்து  ஆறாவது மாநிலமாக கர்நாடகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 6 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்திருப்பதன் மூலம், இந்தியாவில் இனி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவே முடியாது என்ற மாயை தகர்க்கப்பட்டிருக்கிறது. இது  மகிழ்ச்சியளிக்கிறது.

இந்தியாவில் 2004ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்தும், தமிழ்நாட்டில் 2003ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்தும் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் அரசு ஊழியர்களின் ஓய்வுக்குப் பிந்தைய சமூக பொருளாதார பாதுகாப்பை அழித்து விடும் என்பதால் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது. ஆனால், சமூக நீதிக்கு பெயர்பெற்ற தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது தொடர்பான தேர்தல் வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை.

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. இன்னும் கேட்டால் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் எளிதாகும். பிற மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையும், அரசின் பங்களிப்புத் தொகையும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் இந்த தொகை அவ்வாறு செலுத்தப்படவில்லை; மாறாக இந்தத் தொகை தனிக்கணக்கில் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க;-  Thoppur Accident : தொப்பூரில் நடந்தது விபத்தல்ல... கொலை - இனியும் இது நடக்க கூடாது- அன்புமணி ஆவேசம்

அதனால் அந்நிதியை அரசின் கணக்கிற்கு மாற்றிக் கொள்வதில் எந்தவிதமான தடையும் இல்லை. ஆனாலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தயங்குவது ஏன்? எனத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வரும் அரசு ஊழியர்கள், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, இக்கோரிக்கையை  வலியுறுத்தி பிப்ரவரி 26ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். ஆனாலும் கூட அதுகுறித்து சிறிதும் கவலைப்படாமல் தமிழக அரசு செயல்படுகிறது. வாழ்நாளின் பெரும் பகுதியை அரசுப் பணிகளில் கழித்தவர்கள், அவர்களின் பணி ஓய்வுக்காலத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க ஓய்வூதியம் வழங்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு  செயல்படுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios