பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற கூடாது என்பதில் ஏன் இந்த அளவு கோபமாக உள்ளார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் கே.எஸ் அழகிரி.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இல்லத்தில் அவரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரி, ‘நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் ஏழைமக்கள் பட்டா இல்லாமலும் மின்சார இணைப்பு இல்லாமலும் அவதிப்படுகிறார்கள்.

நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள இந்த பிரச்சினையை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கவனத்திற்கு தற்போது கொண்டு சென்றுள்ளதாகவும், அந்த மக்களுக்கு மின் இணைப்பு பட்டா உள்ளிட்ட அடிப்படை தேவைகளை செய்து தர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம். இலங்கை பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில் அந்நாட்டு மக்களுக்கு உதவும் நோக்கில் காங்கிரஸ் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியை தமிழக முதலமைச்சர் இடம் வழங்கினோம்.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆதரவுடன் தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த ஓராண்டாக மிகச் சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற கூடாது என்பதில் ஏன் இந்த அளவு கோபமாக உள்ளார். திமுக மீதும் காங்கிரஸ் மீதும் கோபம் இருந்தால் அந்த கட்சிகள் மீது அதை காட்ட வேண்டும் ஆனால், லட்சக்கணக்கான சாதாரண மாணவர்கள் மீது இந்த கோபத்தை அவர் காட்டக் கூடாது, மாணவர்களின் வயிற்று எரிச்சல் அவரை சபிக்கும் என்று மிகவும் காட்டமாக விமர்சித்தார் கே.எஸ் அழகிரி.
இதையும் படிங்க : "இந்து சக்தி.. அடிபணிந்த அரசு..!" ஆதீன விவகாரத்தில் மார்தட்டும் ஹெச். ராஜா
