ஒரு வழியா பாஜக வழிக்கு வந்த திமுக.. பட்டின பிரவேசத்திற்கு நானும் வரேன்.! கெத்து காட்டும் அண்ணாமலை !
‘தமிழக மக்களின் ஆதங்கத்தை உணர்ந்து தருமபுர ஆதீனம் பட்டினப் பிரவேசத்தில் பல்லக்குத் தூக்க விதிக்கப்பட்ட தடை நீங்கவுள்ளதாக அறிந்தேன். தமிழக மக்களின் குரலாகவும், அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் பாஜக என்றும் மக்களோடு இருக்கும்’ என்று பதிவிட்டுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் பாரம்பர்யமாக நடைபெறும் பட்டினப் பிரவேசம் விழாவில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு அந்தப் பகுதியின் கோட்டாட்சியர் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மனிதனை மனிதன் சுமக்க கூடாது என்ற திராவிடர் கழகத்தின் கோரிக்கையின்பேரில், பல்லக்கு தூக்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இது தொடர்பாக மதுரை ஆதீனத்தின் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ‘நான் தருமபுர ஆதீனத்தில்தான் படித்தேன். தமிழ்மொழி வளர்ப்பையும், சைவத்தையும், தமிழையும் பாதுகாக்கும் ஆதீனம் தருமபுர ஆதீனம். பட்டினப் பிரவேச நிகழ்ச்சி 500 ஆண்டுகளாக நடக்கும் பாரம்பர்யம். 500 ஆண்டுகளாக நடக்கும் இந்த பாரம்பர்யத்தை நடத்தக்கூடாது எனக் கூறுவது வருத்தமளிக்கிறது. வெள்ளைக்காரர்கள் ஆட்சி மற்றும் கலைஞர் காலத்தில்கூட இந்த நிகழ்வு நடந்தது. இதற்கு ஏன் தற்போது தடை விதிக்க வேண்டும்.
தருமபுர ஆதீன மடத்துக்கு கவர்னர் வருகை தந்ததுதான் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி ரத்தானதுக்கு காரணமாகும். பாரம்பர்ய நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக்கூடாது. உயிரைக் கொடுத்தாவது தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம். நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பேன் உயிரே போனாலும் பரவாயில்லை. பாரம்பர்யமாக நடைபெறும் பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை நடத்த அரசு உதவி செய்ய வேண்டும். சிலர் எதிர்ப்பதற்காக பாரம்பர்ய நிகழ்வை எப்படி தடை செய்யலாம். மனிதர்களை மனிதர்களே தூக்குவது இல்லை, இது குருவை சிஷ்யர்கள் தூக்கிச்செல்கிறோம்.
திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கக்கூடாது' என்று கூறினார். மதுரை ஆதீனம் இப்படி பேசியிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை அரசியல் வட்டாரங்களில் ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மதுரை ஆதினம், மன்னார்குடி ஜீயர் போன்ற சமயம் சார்ந்தவர்களும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்ற அரசியல் சார்பு உடையவர்களுக்கும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பல்லக்கு தூக்குபவர்களும் பல்லக்கு தூக்குவது தங்களில் சமய உரிமை என்றும் அதனை யாருக்காகவும் விட்டுத் தர முடியாது என்றும் கூறியுள்ளனர்.
தடையை மீறி ஆதினத்திற்கு பல்லக்கு தூக்கும் நிகழ்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தருமபுர ஆதீன பட்டின பிரவேச நிகழ்ச்சியை நடத்த ஆவண செய்வதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார் என மயிலம் பொம்மபுர ஆதீனம் இன்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதுகுறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘தமிழக மக்களின் ஆதங்கத்தை உணர்ந்து தருமபுர ஆதீனம் பட்டினப் பிரவேசத்தில் பல்லக்குத் தூக்க விதிக்கப்பட்ட தடை நீங்கவுள்ளதாக அறிந்தேன். தமிழக மக்களின் குரலாகவும், அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் பாஜக என்றும் மக்களோடு இருக்கும். மேலும், இந்த விழாவில் தீயசக்திகளால் எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்க பாஜக துணை நிற்கும். சிஷ்யர்களில் ஒருவனாக இந்த விழாவில் நானும் பங்கேற்பேன்' என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : "இந்து சக்தி.. அடிபணிந்த அரசு..!" ஆதீன விவகாரத்தில் மார்தட்டும் ஹெச். ராஜா
இதையும் படிங்க : பட்டின பிரவேசத்திற்கு ‘ஓகே’ சொன்ன ஸ்டாலின்.. ஆதீனம் சொன்ன ஷாக்கிங் நியூஸ் !