#MahatmaGandhi: கோட்சே காந்தியை கொல்லவில்லை..! காம்ரேடுகளிடம் மல்லுகட்டிய கோவை போலீஸ்... பரபர வீடியோ
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது கோட்சே என்ற வார்த்தையை உபயோகப்படுத்தக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் கோவை காவல்துறையினர் மல்லுக்கட்டி உள்ளனர்.
கோவை: மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது கோட்சே என்ற வார்த்தையை உபயோகப்படுத்தக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் கோவை காவல்துறையினர் மல்லுக்கட்டி உள்ளனர்.
தேச தந்தை மகாத்மா காந்தி நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. சென்னையில் மெரினா கடற்கரையில் காந்தியின் சிலைக்கு ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதுதவிர தமிழகம் முழுக்கவே, பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் காந்தியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவையிலும் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடந்த போது, காந்தியை சுட்டுக் கொன்றது கோட்சே என்ற வார்த்தையை உபயோகப்படுத்தக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் காவல்துறையினர் மல்லுக்கட்டி உள்ளனர்.
சிவானந்தா காலனி பகுதியில் ஒற்றுமை மேடையில் சார்பாக காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தபெதிக, விசிக, இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்டவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டன.
அறிவித்தபடி இன்று காலை இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. அப்போது ஜி. ராமகிருஷ்ணன் கையில் ஒரு தாளை வைத்திருந்தபடியே உறுதிமொழியை வாசித்தார். சாதிமத வெறுப்பு அரசியலை மக்களிடையே விதைத்து மதவெறி உருவாக்க துணியும் கோட்சே வாரிகளால் ஆர்எஸ்எஸ்சால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார் என்று ராமகிருஷ்ணன் வாசித்துக் கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு உதவி ஆணையர் சுகுமார் தலைமையிலான காவல்துறையினர் உறுதிமொழியில் கோட்சே என்ற வார்த்தையையும், காந்தியை சுட்டுக் கொன்றான் என்ற வாசகத்தையும் படிக்கக்கூடாது என்று தடுத்தனர். ரத்தினபுரி இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா, காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றான் என்ற வார்த்தையை பயன்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் ஜி. ராமகிருஷ்ணனிடம் அவர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். காந்தியை கொன்றது கோட்சே என்று நீதிமன்றம் தண்டனை தந்தது தெரியாதா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா, எங்களுக்கு அதெல்லாம் தெரியவேண்டியது இல்லை. கொலைகாரன் கோட்சே, இந்து மதவெறி என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தக்கூடாது என்று தொடர்ந்து எதிர்த்தார்.
"
காவல்துறையின் இந்த நடவடிக்கையை கண்ட ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது. தொடர் வாக்குவாதங்களுக்கு பின்னர் காவல்துறையினர் அனைவரையும் சமாதானம் செய்ய, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் ஜி. ராமகிருஷ்ணன் பேசியதாவது: நிகழ்ச்சியில் நாங்கள் எந்த ஒரு மதத்தையும் சுட்டிக்காட்டவில்லை. நடந்ததை தான் கூறினோம். காந்தியை கொன்ற கோட்சேவை சிலர் புகழ்வது வருத்தம் தருகிறது என்றார்.
"