மத்திய அரசின்‌ திட்டமாக இருந்தாலும்‌ சரி, மாநில அரசினுடைய திட்டமாக இருந்தாலும்‌, அந்தத்‌ திட்டத்தின்‌ பலன்‌ கடைக்கோடி மனிதரையும்‌ சேரும்படி செயல்பட வேண்டும்‌ என்று எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்‌ தலைமையில்‌ இன்று தலைமைச்‌ செயலகத்தில்‌ மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும்‌ கண்காணிப்புக்‌ குழுவின்‌ முதல்‌ கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர்,” அரசினுடைய பல்வேறு நலத்திட்டங்கள்‌, அது மத்திய அரசின்‌ திட்டமாக இருந்தாலும்‌ சரி, மாநில அரசினுடைய திட்டமாக இருந்தாலும்‌, அந்தத்‌ திட்டத்தின்‌ பலன்‌ கடைக்கோடி மனிதரையும்‌ சேரும்படி செயல்பட வேண்டும்‌. அதுதான்‌ நம்முடைய நோக்கமாக அமைந்திருக்கிறது.

மேலும் படிக்க: முதலமைச்சர் ஸ்டாலினை தனியாக சந்தித்த ஓபிஎஸ் மகன்...? தலைமைச் செயலகத்தில் பரபரப்பு

அந்த வகையில்‌, திட்டங்களின்‌ செயலாக்கம்‌, நிதிப்‌ பயன்பாடு, வகுக்கப்பட்ட நெறிமுறைகளின்படி திட்டத்தை நிறைவேற்றுதல்‌ போன்ற பல்வேறு அம்சங்களை கவனிக்கவும்‌, கண்காணிக்கவும்‌, திட்டங்களை ஒருங்கிணைத்து அதன்‌ பயன்பாட்டினை உயர்த்தவும்‌ அதற்காகத்‌ தான்‌ இந்தக்‌ குழு அமைக்கப்பட்டிருக்கிறது. எல்லோருக்கும்‌ எல்லாமும்‌ கிடைக்க வேண்டும்‌ என்பதே நம்முடைய அரசினுடைய நோக்கமாக இருக்கிறது. எல்லோர்க்கும்‌ எல்லாம்‌ கிடைக்க வேண்டும்‌ என்று சொன்னால்‌, எல்லாத்‌ துறைகளும்‌ ஒன்று போல முன்னேற்றம்‌ காண வேண்டும்‌.

மருத்துவம்‌, கல்வி, இளைஞர்‌ நலன்‌, வேளாண்‌ மேலாண்மை, பெருந்தொழில்கள்‌, நடுத்தர - சிறு - குறு தொழில்கள்‌, நெசவாளர்‌ மற்றும்‌ மீனவர்‌நலன்‌ என சமுதாயத்தின்‌ ஒவ்வொரு பிரிவினருக்குமான தேவைகளை அறிந்து திட்டங்களை வகுத்து மாநில அரசு செயல்பட்டுக்‌ கொண்டிருக்கிறது. கோட்டையில்‌ தீட்டப்படக்கூடிப திட்டங்கள்‌ கடைக்கோடி மனிதரையும்‌ சென்று சேர, சீரான ஒரு ஒருங்கிணைப்பு அவசியம்‌ தேவை. திட்டங்கள்‌ தீட்டுவதை விட முக்கியமானது அந்தத்‌ திட்டங்கள்‌, அதனுடைய பயன்கள்‌, அதனுடைய நோக்கம்‌ சிதையாமல்‌ நிறைவேற்றுவதுதான்‌.

அதுதான்‌ நமக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கிறது. அந்தச்‌ சவாலை எதிர்கொள்வதற்காகத்தான்‌ இது போன்ற ஆலோசனைக்‌ குழுக்கள்‌ அவசியமாகிறது. மத்திய அரசின்‌ பங்களிப்புடன்‌ 15 துறைகளின்‌ மூலம்‌ செயல்படுத்தப்படக்கூடிய 41 திட்டங்களை மாநில மற்றும்‌ மாவட்ட அளவிலான திசா கண்காணிப்புக்‌ குழு ஆய்வு செய்ய வேண்டும்‌ என்று கூறினார்.

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்‌ திட்டம்‌,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்‌ ,அனைவருக்கும்‌ கல்வி மற்றும்‌ ஆசிரியர்‌ கல்வி திட்டங்கள், தேசிய வேளாண்‌ வளர்ச்சித்‌திட்டம்‌, பிரதம மந்திரியின்‌ திறன்‌ மேம்பாட்டுத்‌ திட்டம் ஆகியவை குறித்து இன்று ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில்‌, ஊரக வளர்ச்சித்‌ துறை அமைச்சர்‌ பெரியகருப்பன்‌, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்‌. பாலு, திருநாவுக்கரசர்‌, தொல்‌. திருமாவளவன்‌, ஆர்‌.எஸ்‌. பாரதி, நவநீதகிருஷ்ணன்‌, சட்டமன்ற உறுப்பினர்கள்‌
வி.ஜி. ராஜேந்திரன்‌, எழிலன்‌, தலைமைச்‌ செயலாளர்‌வெ. இறையன்பு, அரசு துறைச்‌ செயலாளர்கள்‌, அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

மேலும் படிக்க: Perarivalan released :சொன்னோம்.. செய்தோம்.. பேரறிவாளன் விடுதலை குறித்து பெருமிதம் கொள்ளும் ஸ்டாலின்..