‘சிங்கார சென்னை 2.0 முதல் 2,607 அறிவிப்புகள் வரை.. சொல்லாததையும் செஞ்சுருக்கோம்.! மாஸ் காட்டிய ஸ்டாலின்’

இன்று தமிழக சட்டப்பேரவையில் 110 விதி எண் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

CM MK Stalin various announcements in the TN Assembly

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், ‘தமிழ்நாட்டை வளமான, வலிமையான மாநிலமாக உருவாக்கிடவும், அனைத்துத் துறைகளிலும் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்திடச் செய்திடவும் நாள்தோறும் எண்ணற்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நமது தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். 

சமூகம், அரசியல், பொருளாதாரம், மக்கள் மேம்பாடு - அனைத்திலும் நவீனமயம் ஆகியவற்றைக் கொண்ட திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம். சுயமரியாதைக் கொள்கையில் தந்தை பெரியார், இனமான எழுச்சியில் பேரறிஞர் அண்ணா, நவீன தமிழகத்தைக் கட்டமைப்பதில் தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர், மொழி உரிமையில் இனமான பேராசிரியர் ஆகியோரின் வழிநின்று, சமூக மேம்பாட்டிலும் தனிமனித வளர்ச்சியிலும் இந்த நாடு ஒருசேர வளர வேண்டும், அந்த வளர்ச்சி அனைத்துத் தரப்பினரின் நலனை முன்னிறுத்தியிருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் நாம் நாள்தோறும் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருகிறோம். 

CM MK Stalin various announcements in the TN Assembly

தேர்தல் வாக்குறுதிகள்

தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட வாக்குறுதிகளில், 2021- 2022 மற்றும் 2022-2023 ஆம் நிதி ஆண்டுகளில் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, ஆளுநர் உரையில் 77 அறிவிப்புகள், எனது செய்தி வெளியீட்டின் மூலமாக 150 அறிவிப்புகள், சட்டமன்றப் பேரவையில், விதி எண் 110-ன்கீழ் 60 அறிவிப்புகள், மாவட்ட ஆய்வுப் பயணங்களின் போது வெளியிட்ட 77 அறிவிப்புகள், எனது உரைகளின் வழியாக 46 அறிவிப்புகள், நிதிநிலை அறிக்கையில் 255 அறிவிப்புகள், வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் 237 அறிவிப்புகள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களால் மானியக் கோரிக்கைகளின் போது வெளியிடப்பட்ட 2,425 அறிவிப்புகள் என மொத்தம் 3,327 அறிவிப்புகள் நமது அரசால் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன.

இதையும் படிங்க..‘டிசம்பர் 4’ ஜெயலலிதாவுக்கு திதி கொடுத்த தீபக்.. ஆறுமுகசாமி ஆணையம் கிளப்பிய புது சர்ச்சை

நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள்

வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், 78 விழுக்காடு அளவிலான அறிவிப்புகளுக்கு, அதாவது 2,607 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் / அறிவுரைகள் வெளியிடப்பட்டு, அவற்றில் 791 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. 1,816 அறிவிப்புகள் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. 666 அறிவிப்புகளுக்கு உரிய ஆணைகள் வெளியிட தொடர்புடைய துறைகளால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  54 பணிகள் ஒன்றிய அரசின் பரிசீலனையில் உள்ளன என்பதை இந்த நேரத்தில் நான் குறிப்பிடக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நகர்ப்புரச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்

தமிழ்நாட்டில் உள்ள 649 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில், மொத்தம் 55 ஆயிரத்து 567 கி.மீ. நீளமுள்ள சாலைகள் அமைந்துள்ளன. இவற்றில், 6 ஆயிரத்து 45 கி.மீ நீளமுள்ள சாலைகள், ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டுள்ள பாதாளச் சாக்கடைத்திட்டங்கள் மற்றும் குடிநீர் குழாய் பணிகள் போன்றவற்றால் சேதமடைந்துள்ளன. மேலும், 2016-2017 ஆம் ஆண்டிற்கு பின்பு மேம்படுத்தப்படாமல் பழுதடைந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் நீளச் சாலைகள் உள்ளன.

தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியாக, நடப்பு நிதியாண்டிலேயே 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, 4 ஆயிரத்து 600 கி.மீ நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும். இதுதவிர, சிங்காரச் சென்னை 2.0, மாநில நிதிக் குழு மானிய திட்ட நிதி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், நபார்டு வங்கி நிதி உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிதிகளை ஒருங்கிணைத்து, 7 ஆயிரத்து 388 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 16 ஆயிரத்து 390 கி.மீ. நீளமுள்ள சாலைகளும் படிப்படியாக மேம்படுத்தப்படும்.

இதையும் படிங்க..நிமிடத்துக்கு நிமிடம் அப்டேட்.. எடப்பாடி சொன்னது பொய்.! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் திருப்பம்

CM MK Stalin various announcements in the TN Assembly

போக்குவரத்துத் துறை

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகமானது கோவிட் பெருந்தொற்று காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது. பேருந்துகளில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை 2020-2021 காலத்தில் நாளொன்றுக்கு 70 இலட்சமாகக் குறைந்தது. இதனால் போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலை பாதிக்கப்பட்டது. கொரோனாவையும் கட்டுப்படுத்தி, போக்குவரத்து வசதியையும் கழக அரசு சீர் செய்த பிறகு, இப்போது நாளொன்றுக்கு ஒரு கோடியே 70 இலட்சம் பேராக பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

கட்டணமில்லா பேருந்து வசதி

அரசின் மிகச் சிறந்த சேவைத் திட்டமான மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயண வசதியின் மூலமாக மகளிர் நாளொன்றுக்கு சராசரியாக 44 இலட்சம் பேர் பயணம் செய்து வருகிறார்கள். இதற்காக 7,105 சாதாரணக்கட்டண நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கட்டணமில்லாப் பேருந்துகளை அன்றாடம் வேலைக்குச் செல்லும் பெண்கள், சிறு வியாபாரம் செய்யக்கூடிய தாய்மார்கள் உள்ளிட்டோர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 

இந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், இதுவரை சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் பணம் மகளிருக்கு சேமிப்பாக மாறியுள்ளது என்பதைப் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன். இதனை அரசு தனது வருமான இழப்பாகக் கருதவில்லை. மகளிர் மேம்பாட்டுக்கான வளர்ச்சித் திட்டமாகவே கருதுகிறது.

சொல்லாததையும் செய்துள்ளோம்

பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கிடையே இத்தகைய திட்டங்களை தீட்டுகிறோம். சொன்னதைச் செய்ய மட்டுமல்ல. சொல்லாததையும் செய்யவும் முயற்சித்து வருகிறது நம்முடைய தமிழ்நாடு அரசு. புதிய, புதிய திட்டங்களை நாளும் உருவாக்கி அனைத்துத் துறைகளையும் மேம்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. துறைதோறும், துறைதோறும் தொண்டு செய்வோம் என்று கூறி அமைகிறேன்’ என்று கூறினார்.

இதையும் படிங்க..தமிழக அரசு ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ்.. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios