ராகுல் காந்தியை பார்த்து பாஜகவிற்கு பயமா.?தகுதி நீக்கம் செய்ய காட்டிய அவசரம் இப்போது ஏன் இல்லை? மு.க.ஸ்டாலின்
மோடி பற்றிய அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டு இருந்த நிலையில், அவரது தண்டனையை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ள நிலையில், தகுதி நீக்கம் செய்ய காட்டிய அவசரம் இப்போது ஏன் இல்லையென முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுல் காந்தி தகுதி நீக்கம்
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடளுமன்ற தேர்தலின் போது நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். கர்நாடகாவின் கோலாரில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசிய அவர், 'அனைத்து திருடர்களின் பெயரும் மோடி என்று முடிவது ஏன்?' என கேள்வி எழுப்பி இருந்தார். இது தொடர்பான வீடியோஅப்போது வெளியாகி வைரலானது. இதனையடுத்து ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிராக குஜராத் மாநில முன்னாள் மந்திரியும், பா.ஜனதா எம்.எல்.ஏ.வுமான புர்னேஷ் மோடி, சூரத் பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்ற அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை சுமார் 4 ஆண்டுகள் நடைபெற்ற நிலையில், ராகுல் காந்தி பேசியது தவறு என கூறிய நீதிபதி 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.
உத்தரவிற்கு இடைக்கால தடை
இந்த தண்டனை காரணமாக ராகுல்காந்தியின் எம்பி பதவி அடுத்த 36 மணி நேரத்தில் பறிக்கப்பட்டது. மேலும் எம்பிக்கு கொடுக்க்ப்பட்ட வீட்டையும் காலி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து குஜராத் மாநில உயர் நீதிமன்றத்திலும் ராகுல் காந்தி மேல் முறையீடு செய்தார். அங்கும் ராகுல் காந்தி மீதான தீர்ப்பை நீதிபதி உறுதி செய்தார். இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த 2 தினங்களுக்கு முன்பு வந்தது. அப்போது ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பிற்கு தடை பிறப்பிக்கப்பட்டது. இந்தநிலையில் தீர்ப்பு வெளியாகி 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை எம்பி பதவியை திரும்ப வழங்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ராகுலை பார்த்து பயமா.?
இந்தநிலையில் இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ராகுல் காந்தி மீதான தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அவரது எம்.பி பதவி நீக்கத்தை ஏன் திரும்பப் பெறவில்லை? அவரைத் தகுதி நீக்கம் செய்வதற்குக் காட்டிய அவசரத்தைத் திரும்பப் பெறுவதில் ஏன் காட்டவில்லை. சகோதரர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதை நினைத்து பாஜக அஞ்சுகிறதா" எனக் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.