ஆளுநர் மாளிகைகளை வைத்து மாநில நிர்வாகத்தை முடக்குவதை ஒரு ஆக்ஷன் பிளானாகவே வைத்திருக்கிறது பா.ஜ.க.!- ஸ்டாலின்
மத்தியில் ஆட்சிப் பொறுப்பின் கடைசிக் கட்டத்தில் இருக்கும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். விரும்பும், சர்வாதிகாரம் கொண்ட ஆட்சியை உருவாக்க நினைக்கிறது!. அதனால்தான் அவர்கள் அரசியல் சட்டப்படியும் ஆட்சி நடத்தவில்லை; மாநிலங்களையும் மதிக்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் Speaking for India Podcast என்ற தலைப்பில் இந்திய அளவில் அரசியல் நிகழ்வுகளை தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்ட ஆடியோ பதிவில், செப்டம்பர் 23-ஆம் தேதி வெளியான இரண்டாவது எபிசோடில், சி.ஏ.ஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த பி.ஜே.பி-யின் ஏழு மெகா ஊழல்களைப் பற்றிப் பேசியிருந்தேன். அவையெல்லாம் உண்மை என்று ஒன்றிய அரசே ஒப்புக் கொள்வது போன்று, ஒரு விஷயத்தைச் செய்திருக்கிறார்கள்.
இந்தியா முழுவதும் இந்த “Speaking for India” ரீச் ஆன பின்பு, அக்டோபர் இரண்டாவது வாரத்தில் ஒரு செய்தி வந்தது. அதன் தலைப்பு என்ன என்றால், ”பா.ஜ.க அரசின் ஊழல்களை வெளிக்கொண்டு வந்த சி.ஏ.ஜி அதிகாரிகள் செப்டம்பர் 12-ஆம் தேதியே கூண்டோடு மாற்றம்”. அதுதான் அந்தச் செய்தி!
எவ்வளவு ஸ்பீடாக ஆக்ஷன் எடுத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா..? சரி… அதே வேகத்தோடு இந்த எபிசோடில் பேசப்போவதையும் உடனே கொடுக்கிறார்களா என்று பார்ப்போம். இந்த எபிசோடில் நான் பேசப்போவது: மாநில உரிமைகள்! மாநிலங்களின் கருத்தை கேட்கவும் மனசில்லை... அரசியல் சட்டம் வழங்கிய அதிகாரத்திற்குள்ளேயும் மாநிலங்களைச் செயல்பட விடுவதில்லை… ஆளுநர் மாளிகைகளை வைத்து மாநில நிர்வாகத்தை முடக்குவதை ஒரு ஆக்ஷன் பிளானாகவே வைத்திருக்கிறது பா.ஜ.க.! அதனால்தான், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 19 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இருக்க பா.ஜ.க. ஆளுநரைப் பயன்படுத்துகிறது. மாநிலங்களின் உரிமையையும் – சட்டமன்றங்களின் மாண்பையும் எப்படியெல்லாம் சிறுமைப்படுத்துகிறார்கள் என்று பாருங்கள்!
இவ்வாறு, படிப்படியாக ஒற்றை கட்சி - ஒற்றைத் தலைமை - ஒற்றை அதிகாரம் பொருந்திய பிரதமர் - என்று நாட்டை நகர்த்த முயற்சி செய்கிறார்கள் என்று சொல்வதைவிட, உலகத்தின் பெரிய இந்திய ஜனநாயக அமைப்பையே சின்னாபின்னப்படுத்தி சிதைத்துக்கொண்டு இருக்கிறார்கள். மொத்தத்தில், பா.ஜ.க. ஆட்சியில் மாநில உரிமைகள் நசுக்கப்பட்டு, நம் அரசியல் சட்டம் தந்த கூட்டாட்சிக் கருத்தியல், ஜனநாயகம் என எல்லாம் மக்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறது! இவர்கள் செய்வதில் மிக மோசமானது என்ன என்றால், மாநிலங்களின் கல்வி உரிமையில் தலையிட்டு, குழந்தைகளின் எதிர்காலத்தோடு விளையாடுவதுதான். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பண்பு இருக்கிறது – ஒரு கலாச்சாரம் இருக்கிறது – அவர்களுக்கு என்று தனிப்பட்ட சிந்தனை இருக்கிறது.
இதையெல்லாம் அழிப்பதற்கான கொள்கைதான் தேசிய கல்விக் கொள்கை! இவ்வாறு பா.ஜ.க. ஆட்சி பறித்த உரிமைகளை ஒன்று ஒன்றாகப் பட்டியல் போட வேண்டும் என்றால், இன்னும் பத்து எபிசோட் பேசலாம். இது எல்லாவற்றில் இருந்தும் நம்மைப் பாதுகாக்க இருக்கும் ஒரே கவசம், மாநில சுயாட்சிதான்! இன்றைக்கு ஒன்றியத்தின் ஆட்சிப் பொறுப்பின் கடைசிக் கட்டத்தில் இருக்கும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். விரும்பும், சர்வாதிகாரம் கொண்ட ஆட்சியை உருவாக்க நினைக்கிறது!. அதனால்தான் அவர்கள் அரசியல் சட்டப்படியும் ஆட்சி நடத்தவில்லை; மாநிலங்களையும் மதிக்கவில்லை! மாநிலங்களைச் செயல்படவிடாத ஒன்றிய அரசு, மாநில அரசின் சம்பளத்தைப் பெற்று மாநில நலனுக்கு எதிராக செயல்படுகிற ஆளுநர்கள், இவர்களை வைத்துக்கொண்டே எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை எதிர்க்கட்சி ஆளுகிற மாநிலங்களால் செய்ய முடிகிறது என்றால், கூட்டாட்சி நெறிமுறைகளை மதிக்கும் ஒரு ஆட்சி, ஒன்றியத்தில் அமைந்தால், எல்லா மாநிலங்களும் மேலும் செழிக்கும்.
மாநில சுயாட்சி என்ற கொள்கை வெல்ல வேண்டும் என்றால், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு மக்கள் தயாராக வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மினி நாடாளுமன்றத் தேர்தலாகப் பார்க்கப்படும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடக்க இருக்கிறது. அதில் வாக்களிக்கப் போகும் வாக்காளப் பெருமக்களும் இதை மனதில் வைத்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நிறைவாக, இந்த எபிசோடைக் கேட்ட உங்களிடம் உரிமையோடு நான் கேட்பது, இந்தியா கூட்டணியின் கையில், இந்தியாவை ஒப்படையுங்கள். மாநிலங்களைக் காப்போம்! இந்தியாவைக் காப்போம்! இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைப்போம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.