உப்புமா கதை போலத்தான் மத்தியில் பாஜக ஆட்சி..! 2021ல் தமிழகம்..! 2024இல் இந்தியாவிற்கே விடியல்- மு.க.ஸ்டாலின்
நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் சேது சமுத்திரதிட்டம், 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, கருப்பு பணம் மீட்பு, வங்கியில் 15 லட்சம், எய்ம்ஸ் மருத்துவமனை, ஆன் லைன் சூதாட்டம் ஆகியவை குறித்து திமுக உறுப்பினர்கள் கேட்ட கேள்விகள் எதுக்கும் பதிலளிக்க முடியாத நிலையில் பிரதமர் உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொரட்டூரில் நடைப்பெற்ற முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி இல்ல திருமணவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருணத்தை நடத்தி வைத்தார். இதனை தொடர்ந்து திருமண விழாவில் பேசிய அவர், இது ஒரு குடும்ப விழா. மணமகன் உடலில் கருப்பு சிவப்பு ரத்தம் தான் ஓடுகிறது. பரிதி இளம் வழுதி என் இனிய ஆருயிர் நண்பர் அதை தாண்டி சொல்ல வேண்டும் என்றால் அவர் என் உயிர் நண்பன். மதுரையில் 1980 ஆம் ஆண்டு இளைஞர் அணி வேண்டும் என கலைஞர் உருவாக்கினார். 1981 ஆம் ஆண்டு திருச்சியில் நடைப்பெற்ற கலந்துரையாடல் கூட்டம் நடத்தினார்கள். அந்த கூட்டத்தில் பல முன்னோடிகள் உரையாற்றினார்கள். பரிதி இளம் வழுதி உரையாற்றிய போது, இளைஞர் அணியை துவங்கிவிட்டீர்கள். அந்த அணிக்கு ஸ்டாலினை தலைவராக்க வேண்டும் என பேசினார். அதில் கலைஞருக்கு உடன்பாடு இல்லையென தெரிவித்தார்.
பரிதிக்கு என் மீது கோபம்
இடையில் பரிதிக்கு என் மேல் கோபம். எல்லோரும் அவரை விமர்சித்து பேசினார்கள். நான் மட்டும் ஒரு வார்த்தை கூட அவர் குறித்து பேசவில்லை. அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் இறந்த போது முதல் ஆளாக நான் போனேன். அவர் என் மீது எவ்வளவு கோப பட்டாலும் மாற்று கட்சிக்கு சென்றாலும் அவர் கட்சிக்கு ஆற்றிய பணிகளை என்றும் மறக்க முடியாது. 1991-96 ஆட்சி காலத்தில் சட்டமன்றத்தில் தனி ஆளாக நின்று ஆளும் கட்சியை கேள்வி கேட்டவர். அவரை கலைஞர் பல முறை அழைத்து பாராட்டி உள்ளார். முரசொலியில் பரிதி இளம் வழுதியை வீர அபிமன்யு என பாராட்டி எழுதினார். இன்று பிப் 10 . இதே தேதியில் தான் கலைஞர் முதன் முதலில் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த தேதியில் திருமணம் நடந்தது மகிழ்ச்சி. பரிதி இல்லாத நிலையில் ஒரு தந்தையாக அவர் மகனின் திருமணத்தை நடத்தி வைக்கிறேன் என உருக்கமாக பேசினார்.
2024ல் இந்தியாவிற்கு விடியல்
நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் சேது சமுத்திரதிட்டம், 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, கருப்பு பணம் மீட்பு, வங்கியில் 15 லட்சம், எய்ம்ஸ் மருத்துவமனை, ஆன் லைன் சூதாட்டம் ஆகியவை குறித்து திமுக உறுப்பினர்கள் கேட்ட கேள்விகள் எதுக்கும் பதிலளிக்க முடியாத நிலையில் பிரதமர் உள்ளார். 2021 ல் ஒற்றை செங்கல்லை காண்பித்து பிரச்சாரம் செய்த உதயநிதி, நாடாளுமன்ற தேர்தலுக்கும் இன்னொரு செங்கல்லை எடுத்துக்கொண்டு வருவானே என்ற பயம் கூட இல்லை என பேசிய அவர், திமுக எம்பி திருச்சி சிவா மாநிலங்களைவையில் பேசிய உப்புமா கதையை போல் தான் இன்றைக்கு மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 2021 ல் தமிழ்நாட்டுக்கு விடியலை தந்ததை போல 2024ல் இந்தியாவுக்கே விடியல் தர தயாராகுங்கள் என வலியுறுத்தினார்.
இதையும் படியுங்கள்