பெண்கள் துரத்தி துரத்தி.. அண்ணாமலை வெளியில் நடமாட முடியாது - ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி எச்சரிக்கை
அண்ணாமலை வெளியில் நடமாட முடியாது. இதை அரசியல் ரீதியாக சொல்கிறேன். அண்ணாமலை பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. எவ்வளவோ பேரை நாங்கள் அரசியலில் பார்த்து விட்டோம் என்று கூறியுள்ளார் புகழேந்தி.
ஆங்கில நாளிதழுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில், “தமிழகத்தின் பல்வேறு நிர்வாகங்கள் ஊழலில் திளைத்தது. முன்னாள் முதல்வர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். அதனால் தான் தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அது ஊழலில் முதல் இடம் என்பதை என்னால் சொல்ல முடியும்” என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து கூறியிருந்தார்.
பாஜக தலைவர் அண்ணாமலையின் இந்த பேச்சு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அதிமுக முக்கிய தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த புகழேந்தி.
அப்போது பேசிய அவர், “புரட்சித்தலைவி அம்மா அவர்களைப் பற்றி தவறாக பேசினால் தமிழகத்தின் தாய்மார்கள் அண்ணாமலையை ஓட ஓட விரட்டுவார்கள் பழனிசாமியும், அண்ணாமலையும் நாடகம் ஆடுகிறார்கள். அண்ணாமலை தலைவர் என்றால் பிஜேபியுடன் கூட்டணி தொடராது. இதே அண்ணாமலை, என்னுடைய மனைவி ஜெயலலிதாவைவிட ஆயிரம் மடங்கு உயர்ந்தவர் என பேசினார். அன்று கண்டித்து பேசியது நான் மட்டுமே.
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என நேற்று இரவே கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓ பன்னீர் செல்வம் அண்ணாமலையை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதாவை பேசிவிட்டு தமிழகத்தில் அரசியல் பேச வேண்டும் என்றால் அண்ணாமலை அதை மறந்து விட வேண்டும். வெளியிலே வர முடியாது. பெண்கள் துரத்தி துரத்தி அடிக்கிற காட்சியை தமிழகம் பார்க்கும். ஜெயலலிதாவை தமிழக மக்கள் தெய்வமாக பார்க்கிறார்கள்.
ஜெயலலிதாவை விமர்சிப்பதற்கு அண்ணாமலைக்கு என்ன யோக்கியதை உள்ளது. ஜெயலலிதாவை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. எந்த அடிப்படையில் அவரை குற்றவாளி என அண்ணாமலை சொல்கிறார். அண்ணாமலை வெளியில் நடமாட முடியாது. இதை அரசியல் ரீதியாக சொல்கிறேன். அண்ணாமலை பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. எவ்வளவோ பேரை நாங்கள் அரசியலில் பார்த்து விட்டோம்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “என்ன பேச வேண்டும் என்று தெரிந்து அண்ணாமலை பேச வேண்டும். அண்ணாமலையை கர்நாடகாவில் யாருக்காவது தெரியுமா? அண்ணாமலையால் தான் கர்நாடகாவில் பெரும் தோல்வி கிடைத்தது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி சொல்ல வேண்டியதுதானே.. அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை. பாஜகவை தமிழகத்தில் இருந்து மூட்டை கட்ட வைத்துவிடுவோம்” என்று அண்ணாமலைக்கு எதிராக காட்டமாக பேசினார் புகழேந்தி.
எனக்கு பாடம் எடுக்காதீங்க.. தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி லட்சியம்.! அதிமுகவை அலறவிடும் அண்ணாமலை