திமுகவின் சீர்கெட்ட, தரம் தாழ்ந்த அரசியலை அம்பலப்படுத்துவோம் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கருத்து தெரிவித்து இருக்கிறார் பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.
அமைதியான தமிழ்நாட்டில் மதவெறியை விதைத்து கலவரத்தை தூண்டிவிட்டு பாரதிய ஜனதா குளிர்காய நினைப்பதாகவும், அக்கட்சியின் அரசியலை அம்பலப்படுத்துங்கள் என திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நல்லாட்சியின் நற்பெயரை சிதைத்திட பொய்யை மட்டுமே சொல்லிவரும் அதிமுகவால் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு பட்ட பாட்டை மக்களிடம் நினைவுப்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.

நல்லிணக்கமாக வாழ்ந்துவரும் தமிழ்நாட்டு மக்களின் மனதில் மதவெறியை விதைத்து, கலவரத்தை தூண்டிவிட்டு குளிர்காய அவசரம் காட்டும் பாஜகவின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மக்கள் நலனுக்கு எதிரான இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து தமிழ்நாட்டை பாழ்ப்படுத்த நினைப்பதை மக்களிடம் எடுத்துக்கூறுங்கள்.
மதவாத அரசியலுக்கு ஒருபோதும் இடமளிக்காத தமிழக மக்களின் தனித்தன்மையை நினைவுபடுத்துங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் திமுக மீது வைத்துள்ள நம்பிக்கை என்றென்றும் தொடரும் வகையில் களப்பணியாற்றுங்கள் எனவும் தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசிய பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ‘தமிழ்நாட்டு மக்களின் மனதில் ஹிந்து மதத்தின் மீதான வெறுப்பை திணித்து, ஓட்டுக்காக சிறுபான்மை மதத்தினருக்கு பரிந்து பேசி, போலி மதசார்பின்மை பேசி, மதங்களுக்கிடையே மனிதர்களுக்கிடையே பிளவை உருவாக்கி, அரசியல் அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள முனைப்பு காட்டும் திமுகவின் சீர்கெட்ட, தரம் தாழ்ந்த அரசியலை அம்பலப்படுத்துவோம்’ என்று முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
