இனியும் ஓபிஎஸ் அமைதியாக இருக்கமாட்டார்..! பலருக்கும் அடி விழ போகுது...இபிஎஸ் அணியை எச்சரிக்கும் புகழேந்தி
இனியும் ஓபிஎஸ் அமைதியாக இருக்கமாட்டார் எங்க வீட்டு பிள்ளை படம்போல அதிமுகவின் இரண்டாம் பாகத்தை இனி பார்க்கலாம் என பெங்களூர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசை பாராட்டுகிறேன்-புகழேந்தி
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக இரண்டு பிளவாக பிரிந்துள்ளது. இதன் காரணமாக இரண்டு தரப்பும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையிலையில் இன்று ஓ.பன்னீர் செல்வத்தை பெங்களூர்புகழேந்தி சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், 2017ஆம் ஆண்டு உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் மீது ஊழல் புகார் கொடுத்தேன். திமுக ஆட்சிக்கு வந்த பின்னரும் டிவிஎஸ்சி க்கு கடிதம் எழுதினேன் , அதன் காரணமாக தற்போது சோதனை நடத்தப்படுவதாக தெரிவித்தார். இந்த சோதனையிலிருந்து அவர் தப்பிக்க முடியாது , சோதனைக்காக தமிழக அரசை பாராட்டுகிறேன் என கூறினார். முன்னாள் அமைச்சர் காமராஜ் ரேசன் துவரம்பருப்புக்கு கிலோவுக்கு15 முதல் 30 ரூபாய் வரை முறைகேடாக கொள்ளையடித்துள்ளதாகவும், அவருக்கு 60 கோடி வரை சொத்து மதிப்பு ஏறியுள்ளதாக ஊடகங்களில் செய்தி பார்த்தேன்,எனவே காமராஜை சிறைக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்தார்.
ஓபிஎஸ் அமைதியாக இருக்க மாட்டார்
பொதுக்குழு தொடர்பாக நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். எடப்பாடி தரப்பினர் பொதுக்குழுவை வேலைகளை நிறுத்தி விட்டு ஆங்காங்கே நடக்கும் ரெய்டை போய் பார்க்கவும் என கூறினார். 4 ஆண்டுகால ஊழல் ஆட்சியை எடப்பாடி நடத்தியதால்தான் முன்னாள் அமைச்சர்கள் அவருக்கு ஆதரவாக இருப்பதாகவும் தெரிவித்தார். அமைதியின் அடையாளம் ஓபிஎஸ் என தெரிவித்தவர், அக்கிரமக்காரர் இபிஎஸ் என விமர்சித்தார். கூட்டுக் களவானிகள் ஓபிஎஸ்-சை தனிமைப்படுத்தி வைத்திருந்ததால் அவரால் ஊழல் செயல்பாடுகளை கண்டிக்க முடியவில்லையென கூறினார். இனியும் ஓபிஎஸ் அமைதியாக இருக்க மாட்டார் , பொதுக்குழுவில் பாட்டில் வீசி அவமதித்த பிறகும் அவர்களை எதிர்கொண்டு பேசிவிட்டு வெளியேறினார். எங்க வீட்டுப் பிள்ளை படத்தைப்போல் , அதிமுகவின் இரண்டாம் பாகத்தை இனிதான் பார்க்க போகிறீர்கள் , இனி பலருக்கு அடி விழுகும் என புகழேந்தி கூறினார்.
இதையும் படியுங்கள்