ஆடியோ அரசியல்.. இபிஎஸ் ஆதரவு தலைவர்களை நாரடித்த பொன்னையன்.. பொன்னையனுக்கும் அன்வர் ராஜா கதியா.?
அதிமுகவில் கடந்த ஆண்டு வெளியான ஆடியோ பேச்சால் அன்வர் ராஜா நீக்கப்பட்ட நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் ஆடியோ பேச்சால் பொன்னையன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
அதிமுகவில் பரபரப்பும் சர்ச்சையும் இன்னும் அடங்காமல் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே மோதல் வலுத்துக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான பொன்னையன், கன்னியாகுமரியை சேர்ந்த நாஞ்சில் கோலப்பனிடம் செல்போனில் பேசும் 9 நிமிடங்கள் ஆடியோ, அதிமுக முகாமை அசைத்துப் பார்த்திருக்கிறது. அந்த ஆடியோவில் பேசும் பொன்னையன், "தொண்டர்கள் எல்லாம் இரட்டை இலை சின்னத்தின் பக்கம் உள்ளனர். தலைவர்கள் பணத்தின் பக்கம் உள்ளனர். அவரவர் பணத்தை பாதுகாப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு ஆடுகின்றனர். தங்கமணி தன்னை பாதுகாக்க மு.க ஸ்டாலினிடம் ஓடுகிறார். அதேபோல் கே.பி முனுசாமி ஸ்டாலினை திட்டுவதை நிறுத்திவிட்டார். பணத்தை பாதுகாப்பதற்காக இப்படி ஆடுகிறார்கள். கே.பி முனுசாமி துரைமுருகனை பிடித்து பெட்ரோல் பங்கினை வாங்கிவிட்டார். இதனால் மாதம் 2 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்.
அதிமுக தொண்டர்கள்தான் தடுமாறுகிறார்கள். கே.பி முனுசாமி ஒரு நக்சலைட்டாக இருந்தார். டி.ஜி.பி தேவாரம் கே.பி.முனுசாமி நக்சலைட் உடன் தொடர்பு கொண்டிருக்கிறார் என ஜெயலலிதாவிடம் புகார் அளித்ததும் ஜெயலலிதா கே.பி முனுசாமியை ஒதுக்கி வைத்திருந்தார். ஜெயலலிதாவிற்கு முன்பு எம்ஜிஆரும் கே.பி முனுசாமி ஒதுக்கி வைத்திருந்தார். ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் 100 கோடி, 200 கோடி ரூபாய் வைத்துள்ளனர். எடப்பாடி பின்னால் சென்றால் தான் சம்பாதியத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தளவாய் சுந்தரம்தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய புரோக்கர். முதலில் ஒற்றை தலைமை பிரச்சனையை பேசியது தளவாய் சுந்தரம்தான். பொதுக்குழு கூட்டத்தில் சி.வி சண்முகம் நாய் கத்துவதுபோல் கத்துகிறார். அதனால்தான் விவகாரம் நீதிமன்றம் சென்றது. எடப்பாடி ஓபிஎஸ் உடன் சமாதானமாக பேச தயாராக இருந்தார்.
இதையும் படிங்க: எல்லாமே சாதி தான்.. அவர் கையில அதிமுக இருக்கு.. எடப்பாடி பாவம்.! பொன்னையன் பேசும் வைரல் ஆடியோ
ஆனால், அவருக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு இல்லை. எடப்பாடி முதுகிலேயே எம்.எல்.ஏக்கள் குத்துகின்றனர். அதனாலேயே எம்.எல்.ஏக்கள் சொல்வதை எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். சி.வி சண்முகம் கையில் சாதி அடிப்படையில் 19 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். கொங்கு மண்டலத்தில் உள்ள 42 எம்.எல்.ஏக்களில் 9 எம்.எல்.ஏக்கள் மட்டுமே எடப்பாடி பக்கம் உள்ளனர். கே.பி முனுசாமி ஒற்றைத்தலைமைக்கு வர முயற்சிக்கிறார். எடப்பாடி பழனிசாமி கொள்கையை விட்டுவிட்டு பதவிக்கு ஆசைப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்’ என்று ஆடியோவில் பொன்னையன் பேச்சு உள்ளது. இபிஎஸ் முகாமில் அதிர்வலைகளைக் கிளப்புவதற்காக ஓபிஎஸ் தரப்பு இந்த ஆடியோவை வெளியிட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுகவில் கட்டம் கட்டப்படுகிறாரா மாஜி அமைச்சர் அன்வர் ராஜா.? முஷ்டியை முறுக்கும் ஈபிஎஸ் கோஸ்டி..!
கடந்த ஆண்டு இதேபோல ஒரு ஆடியோ அதிமுகவில் பேசு பொருளானது. சசிகலா அதிமுக திரும்புவதற்கு ஆதரவாக பேசி வந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரிடம் பேசிய ஆடியோ வைரலானது. அந்த ஆடியோவில், “சாதி, மதம் கடந்து சின்னம்மா (சசிகலா) தலைமையில் ஒற்றுமையாக அனைவரும் இருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது. ஒற்றுமையாக இருந்திருந்தால் நாம் ஆட்சியை பிடித்திருக்கலாம். அப்படி ஆட்சியைப் பிடித்திருந்தால் எடப்பாடி தன்னை புரட்சித்தலைவர் என்றல்லவா சொல்லியிருப்பார்” என்று அன்வர் ராஜா ஒருமையிலும் பேசியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக இபிஎஸ் ஆதரவு முகாம், அன்வர் ராஜாவுக்கு எதிராக முஸ்டியை முறுக்கி ஒரு வழியாக அவரை கட்சியில் இருந்தும் கட்டம் கட்டி வெளியே அனுப்பியது. தற்போது அன்வர் ராஜா போல அல்லாமல், இபிஎஸ் பக்கம் உள்ள பல தலைவர்களின் ரகசியங்களையும் பொன்னையன் போட்டு உடைத்திருக்கிறார். அன்வர் ராஜாவை ஏற்கனவே வீட்டுக்கு அனுப்பிய அதிமுக தலைவர்கள், பொன்னையன் விஷயத்தில் சும்மா இருப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் 2017-இல் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது பொன்னையன் அவர் பக்கம்தான் நின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்வர் ராஜாவை போலவே பொன்னையனும் எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதி. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என இருவர் அமைச்சரவையிலும் இருந்தவர்.
இதையும் படிங்க: இணை ஒருங்கிணைப்பாளர் கே.சி. பழனிச்சாமி, அவைத் தலைவர் அன்வர் ராஜா.? பாயத் தயாராகும் ஓபிஎஸ் முகாம்!