இணை ஒருங்கிணைப்பாளர் கே.சி. பழனிச்சாமி, அவைத் தலைவர் அன்வர் ராஜா.? பாயத் தயாராகும் ஓபிஎஸ் முகாம்!
அதிமுகவிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி நீக்கப்பட்டுள்ளதாக பரஸ்பரம் இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ள நிலையில், ஓபிஎஸ் முகாமில் புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சென்னையில் கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியிலிருந்து ஓ. பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோரை நீக்கி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பதிலடியாக அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி, கே.பி. முனுசாமி ஆகியோர் நீக்கப்பட்டதாக ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்நிலையில் இபிஎஸ் தரப்பில் கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை அறிவித்து எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதி, கையெழுத்திடும் உரிமை தன்னிடமே இருப்பதாக தெரிவித்திருந்தார். இபிஎஸ் தரப்பும் இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளது.
மேலும் கட்சி அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை நீக்கும்படி ஓபிஎஸ் - இபிஎஸ் என இரு தரப்புமே வருவாய்த் துறையை அணுகியுள்ளது. பொதுக்குழு கூட்டம் முடிந்தும் அதிமுகவில் இன்னும் பிரச்சனை நீடித்துக்கொண்டிருக்கும் நிலையில், ஓபிஎஸ்ஸால் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி, கே.பி. முனுசாமி ஆகியோர் வகித்த பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் திட்டத்தில் ஓபிஎஸ் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு அதிமுகவிலிருந்து முன்பு நீக்கப்பட்ட கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த கே.சி. பழனிச்சாமி நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருடைய நீக்கத்தை ரத்து செய்து, அவர் இணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுவார் என்று ஓபிஎஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: முடக்கப்படும் அதிமுக வங்கி கணக்கு? வங்கிகளுக்கு மாறிமாறி கடிதம் எழுதிய ஓபிஎஸ், இபிஎஸ்.!
இதேபோல அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனின் நியமனம் செல்லாது என்று ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பு அறிவித்த நிலையில், அந்தப் பொறுப்புக்கு அன்வர் ராஜாவை நியமிக்கும் முயற்சியைத் தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இவரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்தான். இவருடைய நீக்கத்தையும் ரத்து செய்து ஓபிஎஸ் தரப்பு நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஓபிஎஸ் தரப்பு வட்டாரத்தில் தகவல்கள் அலையடிக்கின்றன. மேலும் விழுப்புரம், சென்னை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்களையும் ஓபிஎஸ் தரப்பு கட்சியிலிருந்து நீக்க உள்ளதாகவும் ஓபிஎஸ் ஆதரவு முகாமிலிருந்து தகவல்கள் வருகின்றன.
இதையும் படிங்க: யாராயிருந்தாலும் வெட்டுங்கள்..! அடித்து உதையுங்கள்..! மைக்கில் பேசிய ஓபிஎஸ்- மாவட்ட செயலாளர் புகார்
எனவே, இனி வரும் நாட்களில் அடுத்தடுத்து ஓபிஎஸ் தரப்பிலிருந்து அதிரடியான அறிவிப்புகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை இபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்துக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் பதவியே தொடர்வதாக ஓபிஎஸ் தரப்பும் தேர்தல் ஆணையத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பு அடுத்தகட்டமாக நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டு வருகிறது. மழை விட்டாலும் தூவானம் விடாது என்பது போல அதிமுக பொதுக்குழு முடிந்தாலும் பரபரப்பு மட்டும் இன்னும் அடங்காமலேயே உள்ளது.
இதையும் படிங்க:அதிமுக அலுவலகத்தில் என்ன நடந்தது.? அலுவலகம் யாருக்கு சொந்தம்.? ஓபிஎஸ்-இபிஎஸ்ஸுக்கு வருவாய்த் துறை நோட்டீஸ்!