சட்டப்பேரவையில் ஆளுநர் மீதான விவாதம் இருக்காது... சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு மீண்டும் அனுப்பப்படும்- அப்பாவு
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் ரவி திரும்ப அனுப்பிய நிலையில், நாளை மறுதினம் (18ஆம் தேதி) சட்டப்பேரவை கூட்டத்தில் மீண்டும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
ஆளுநர் தமிழக அரசு மோதல்
தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட மசோதா, ஆன் லைன் சூதாட்ட தடை மசோதா உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டதாக தொடர் குற்றச்சாட்டு எழுத்தது. இதனையடுத்து தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தமிழக அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் கிடப்பில் போட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு உச்சநீதிமன்றமும் ஆளுநர்களின் செயல்பாடுகளை விமர்சித்திருந்தது.
சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்
இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் ரவி தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். குறிப்பாக தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வதற்கான சட்ட மசோதாக்கள், தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா உள்ளிட்ட மசோதக்கள் அடங்கும். இதனையடுத்து ஆளுநருக்கு மீண்டும் சட்ட மசோதாக்களை மீண்டும் அனுப்பி வைக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறுகையில், நாளை மறுதினம்(18ஆம் தேதி) தமிழக சட்டப்பேரவை காலை 10 மணிக்கு கூட இருப்பதாக தெரிவித்தார்.
சட்டப்பேரவை கூட்டத்திற்கு அழைப்பு
தமிழக அரசு சட்ட மசோதாக்களை ஆளுநருக்கு அனுப்பியிருந்தது. ஆளுநர் அதை திருப்பி அனுப்பியிருக்கிறார். மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப அரசு விரும்புகிறது. இதனால், அவசர சட்டப்பேரவைக் கூட்டம் நாளை மறுநாள் கூட்டப்படுகிறது. விதிப்படி, ஆளுநர் ஒரு சட்ட மசோதாவை திருப்பி அனுப்பினால், மீண்டும் அந்த மசோதாவை அரசு நிறைவேற்றிக் கொடுத்தால், நிச்சயமாக ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த நடைமுறை அனைவருக்கும் தெரியும்.
மேலும் நீதிமன்றம், ஆளுநர், குடியரசுத் தலைவர் குறித்த விவாதம் எல்லாம் சட்டப்பேரவையில் இருக்காது. சட்டப்பேரவையில் மசோதாக்களை அரசு கொண்டுவரும். அதுகுறித்து விவாதித்து, தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைப்பதுதான் வேலையாக இருக்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்