அதிமுக ஜெயராமன் வீட்டில் 'திடீர்' சோதனை.. உடனே வந்த எஸ்.பி.வேலுமணி..பரபர பின்னணி இதுதான் !
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கோவை மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சியின் அதிமுக முன்னாள் தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 9 மணி நேரத்திற்கும் மேலாக மேற்கொண்ட சோதனை நள்ளிரவில் நிறைவடைந்தது.
கோவை பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள நெம்பர் 4 வீரபாண்டி பேரூராட்சியில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பேரூராட்சி தலைவராக இருந்தவர் கே.வி.என். ஜெயராமன். இவர் தற்போது அதிமுக பெரிய நாயக்கன் பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு தேர்தல் வேட்பு மனுவில் இவர் பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் ரூ.1.25 கோடி அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் இருப்பதாக கணக்கு காண்பித்து இருந்தார்.
2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அளித்த வேட்பு மனுவில் ரூ.3.43 கோடிக்கு அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் இருப்பதாக தாக்கல் செய்து இருந்தார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கே.வி.என். ஜெயராமன் மற்றும் அவரது மனைவி மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1 கோடியே 45 லட்சத்து 75 ஆயிரம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மதியம் 12 மணியளவில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நெம்பர் 4 வீரபாண்டி நாயக்கனூரில் உள்ள கே.வி.என். ஜெயராமன் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர். இந்த சோதனை நள்ளிரவு 12 மணி வரை நடந்தது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
சோதனை நடைபெறுவது குறித்த தகவல் கிடைத்ததும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே. செல்வராஜ் உள்ளிட்ட அதிமுகவினர் கே.வி.என். ஜெயராமன் வீட்டு முன்பு திரண்டு லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். சுமார் 200க்கும் மேற்பட்டோர் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, ‘வருகிற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. ஜெயித்து விடும் என்ற பயத்தில் தி.மு.க. அரசு மிரட்டுவதற்காக தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் நாங்கள் இதற்கெல்லாம் பயப்பட மாட்டோம். வருகிற நகர்புற தேர்தலில் நாங்கள் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவது உறுதி’ என்று கூறினார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரை அடுத்து கடந்த சில மாதங்களாக அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். இதுவரை தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அதிமுக முன்னணி தலைவர்கள் 6 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்துள்ளனர்.இந்நிலையில் இந்த சோதனை அதிமுக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.