தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த நினைக்கும் பாஜகவின் பாச்சா பலிக்காது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் என்றும் பெரியார் ஏற்றிய சமத்துவ தீபம் தான் எரியும் என்று கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூங்கா நகரம் மற்றும் கோயில் நகரமான மதுரையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்பு இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மதுரைக்கு திமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டஙக்ளை பட்டியலிட்டார். தொடர்ந்துக்கு மதுரைக்கு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

பாஜக பாச்சா பலிக்காது

மேலும் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மதுரை திருப்பரங்குன்றம் தீப விவாகாரத்தில் சில கட்சிகள் கலவரத்தை தூண்டுவதாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக பேசிய ஸ்டாலின், ''நாம் தமிழகத்துக்கு வளர்ச்சி அரசியலை முன்னெடுக்க சில கட்சிகள் வேறு அரசியலை முன்னெடுக்கின்றனர். தமிழத்தில் எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் திமுக அதனை முறியடிக்கும். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை உங்கள் பாச்சா இங்கு பலிக்காது.

சில கட்சிகளுக்கு எப்போதும் கலவர சிந்தனை

மதுரையில் எந்த சக்தியும் பிரிவினையை உண்டாக்க முடியாது. சில கட்சிகளுக்கு எப்போதும் கலவர சிந்தனை தான். எப்போதும் போல திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டது.மக்களும் பக்தியுடன் வழிபட்டு சென்று விட்டனர். ஆனால் சிலர் தேவையில்லாமல் பிரச்சனையை கிளப்பினார்கள். திருப்பரங்குன்றத்தில் வன்முறையை தூண்டுவது யார்? என்பது உள்ளூர் மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

பெரியார் ஏற்றிய சமத்துவ தீபம் தான் எரியும்

ஆன்மிகம் என்பது மன நிம்மதியை தந்து மக்களை ஒற்றுமையாக வைப்பதுதான். அரசியல் லாபங்களுக்காக மக்களை துண்டாடும் செயல் ஆன்மிகம் இல்லை. இது கேடு கெட்ட அரசியல். மதுரை மக்கள் வன்முறையை தூண்ட கூப்பிட்டால் அடித்து விரட்டுவார்கள். கலவர சிந்தனை கொண்டவர்களுக்கு எதிராக அமைதியின் பக்கம் நின்ற மதுரை மக்களுக்கு நன்றி. திமுக அரசை ஆன்மிகத்துக்கு எதிரான அரசு என காழ்ப்புணர்சியுடன் கூறுவது மக்களுக்கு நன்றாக தெரியும். இந்த தமிழ்நாட்டில் என்றும் பெரியார் ஏற்றிய சமத்துவ தீபம் தான் எரியும்'' என்று தெரிவித்தார்.

எய்ம்ஸ் இன்னும் வரவில்லை

மேலும் மத்திய பஜக அரசை சாடிய ஸ்டாலின், ''மத்திய பாஜக அரசு 10 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வருவதாக எய்ம்ஸ் இன்னும் மதுரைக்கு வரவில்லை. சப்பையான காரணங்களை கூறி மதுரைக்கு மெட்ரோ ரயில் கொண்டு வர மறுக்கிறார்கள். மதுரைக்கு மெட்ரோ தேவையில்லை என பாஜகவினர் திமிராக கூறினார்கள். தமிழர்களின் பெருமையான கீழடி அகழாய்வு பணிகளை மத்திய அரசு தடுத்து நிறுத்தியது. தமிழர்கள் மீது பாஜக வெறுப்புடன் உள்ளது. தமிழகத்துக்கு விளையாட்டு என அனைத்திலும் நிதி தர மறுக்கிறார்கள்'' என்றார்.