எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது. அன்புமணி தான் பாமகவின் தலைவர் என்று அவரது ஆதரவாளர் வழக்கறிஞர் கே.பாலு கூறியுள்ளார்.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி என தந்தை, மகன் இடையிலான மோதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், இருவரும் பாமகவுக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையம் சென்றபோது, 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி வரை அன்புமணி தான் பாமகவின் தலைவர் என்று தேர்தல் ஆணையம் உறுதியாக தெரிவித்தது. இதை எதிர்த்து ராமதாஸ் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றம் சென்றது.
ராமதாஸ் தரப்பு கொண்டாட்டம்
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் 'அங்கீகரிக்கபடாத கட்சியின் உரிமை கோரல் விவகாரத்தில் ஒரு சாரார் கருத்தை பெற்று தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறி ராமதாஸ் தரப்பு உரிமையியல் நீதிமன்றத்தில் நாடலாம்' என்று உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதாக ராமதாஸ் தரப்பு கொண்டாடியது.
அன்புமணி இனி தலைவர் இல்லை
''அன்புமணி தலைவர் என கூறிக்கொண்டு போலியான ஆவணங்கள் கொடுத்தது செல்லாது. அது ரத்து செய்யப்படுகிறது என்ற தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இது ராமாதாஸுக்கும், பாமகவுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இனி அன்புமணி தலைவர் என சொல்ல முடியாது'' என்று ராமதாஸ் ஆதரவாளர் ஜி.கே.மணி கூறியிருந்தார்.
கோமாளித்தனம் போல் கொண்டாட்டம்
இந்த நிலையில் எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் தரப்பு வெற்றி பெற முடியாது என்று அன்புமணி ஆதரவாளர் வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலு , ''டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கின்போது சின்னம் குறித்து பேசவில்லை. அன்புமணி தலைவராக தொடர்வது தவறு என்றும் நீதிமன்றம் சொல்லவில்லை. தாங்கள் தாக்கல் செய்ய ஆவணங்களை திரும்ப பெறுவதாக தேர்தல் ஆணையமும் சொல்லவில்லை. உயர்நீதிமன்ற தீர்ப்பை முழுமையயாக படிக்காமல் ஒன்றிரண்டு பத்தியை மட்டும் படித்து விட்டு ராமதாஸ் தரப்பினர் தங்களுக்கு வெற்றி கிடைத்து விட்டதாக கோமாளித்தனமாக கொண்டாடுகின்றனர்.
ராமதாஸ் தரப்பு வெற்றி பெற முடியாது
உங்களுடைய தரப்பு வாதத்தை நிரூபிக்க வேண்டும் என்றால் அன்புமணி தலைவராக இருக்கக் கூடாது என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்றால் உரிமையியல் நீதிமன்றத்துக்கு செல்லுங்கள். அங்கு பாமக உங்களுக்கு சொந்தம் என்ற ஆதாரத்தை கொடுத்தால் தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யும். உரிமையியல் நீதிமன்றத்துக்கு செல்ல உங்களுக்கு ஏன் தயக்கம்? இந்த வழக்கில் எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும், எந்த நீதிமன்றம் சென்றாலும் அவர்களால் (ராமதாஸ் தரப்பு) வெற்றி பெற முடியாது என்பதை நான் சவாலாக சொல்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.


