திருப்பரங்குன்றம் கோயில் தீப விவகாரம் தொடர்பாக காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் கோயில் தீப விவகாரம் நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெரிதாக பேசப்பட்டது. திருப்பரங்குன்றம் கோயில் மலை மீது தொடர்ந்து இரண்டு நாட்கள் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழக அரசு தீபம் ஏற்ற அனுமதி வழங்கவில்லை. தர்கா அருகே தீபம் ஏற்றினால் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். பாரம்பரிய முறைப்பாடி வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தது. திமுக நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை. இந்துக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்க பார்க்கிறது என்று பாஜக குற்றம்சாட்டியது.

காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எச்.ராஜா

இதற்கிடையே தீப விவகாரத்தில் திருப்பரங்குன்றம் முழுவதும் பெரும் பதற்றமாக இருந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா காரைக்குடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக திருப்பரங்குன்றம் செல்ல முயன்றார். இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் காவல்துறையினர் கும்மங்குடி அருகே எச்.ராஜாவின் காரை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் ஆவேசம் அடைந்த எச்.ராஜா மற்றும் பாஜகவினர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

அப்போது முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை எச்.ராஜா தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், மத கலவரம் தூண்டும் வகையில் பேசுதல், முதல்வர், அமைச்சர்களை அவதூறாக பேசுதால் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேகர்பாபு பதிலடி

இதற்கிடையே திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த எச்.ராஜா, 'நீதிமன்ற உத்தரவை திமுக அரசு செயல்படுத்த மறுக்கிறது. கோயிலில் தீபம் ஏற்றினால் இவர்களுக்கு என்ன பிரச்சனை?' என்றார். இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு, 'முன்பு நீதிமன்றத்தை தரக்குறைவாக பேசிய எச்.ராஜா, இப்போது நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்கிறார். எச்.ராஜா போன்ற அரசியல்வாதிகள் எங்களை போன்ற நேர்மையான அரசியல்வாதிகளுக்கு சாபக்கேடாக அமைந்துள்ளன'' என்று தெரிவித்தார்.