Asianet News TamilAsianet News Tamil

பட்டியல் சமூகத்தினர் குறித்த கண்துடைப்புத் தீர்மானம் யாரை ஏமாற்ற? திமுக அரசுக்கு அண்ணாமலை கேள்வி

பட்டியல் சமூக சகோதர, சகோதரிகளின் வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு பாதுகாப்பதே அவர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய உதவி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

annamalai slams dmk govt and resolution of execution at tn assembly
Author
First Published Apr 19, 2023, 10:33 PM IST | Last Updated Apr 19, 2023, 10:33 PM IST

பட்டியல் சமூக சகோதர, சகோதரிகளின் வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு பாதுகாப்பதே அவர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய உதவி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பல கேள்விகளை எழுப்பி வருகிறோம். திமுக நிர்வாகி ஒருவர், கோவிலுக்குள் செல்ல விடாமல் பட்டியல் சமூக இளைஞர் ஒருவரை அவமானப்படுத்தினார். வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில், மனித மலம் கலந்தவர்கள் மேல் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பட்டியல் சமூக மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு, மத்திய அரசு ஒதுக்கியிருந்த ரூபாய் 10000 கோடி நிதியைச் செலவிடாமல் இருப்பதை குறித்து தமிழக முதல்வரிடம் கேள்வி எழுப்பினோம். அதற்கு தமிழக அரசிடம் இருந்து இன்று வரை பதில் இல்லை.

ராணிப்பேட்டையில், கடந்த 2 ஆண்டுகளாக ஆதிதிராவிடர் குழந்தைகளுக்கான பள்ளிக் கட்டிடம் கட்டாமல் புறக்கணிக்கும் திமுக ஆட்சி குறித்து நேற்று கேள்வி எழுப்பியிருக்கிறோம். திமுக ஆட்சியில், பட்டியல் சமூக சகோதர, சகோதரிகளுக்கு எதிரானக் கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பட்டியல் பிரிவினருக்கும், பட்டியல் சமூகத்தினருக்கும் வழங்கப்படும் சலுகைகளை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி, சட்டசபையில் திமுக இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மு.க.ஸ்டாலின், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது குறித்து அறிந்திருக்க வேண்டும். தமிழக பாஜகவினர், திமுகவினர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிப்பதில் இருந்து தப்பிப்பதற்காகப் பயன்படுத்தும் உத்தியாகத்தான் இது தெரிகிறது. பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், சட்டசபையில், பின்வரும் காரணங்களுக்காக இந்தத் தீர்மானம் தேவையற்றது என்று குறிப்பிட்டார். 

இதையும் படிங்க: கர்நாடக சட்டமன்ற தேர்தல்... 5 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!!

1) இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. 1950 ஆம் ஆண்டு, நமது அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தபோது, இந்துக்கள் மட்டுமே பட்டியல் பிரிவாகக் கருதப்பட்டனர். பின்னர், காக்கா காலேக்கர் ஆணையத்தின் பரிந்துரையின் கீழ், சீக்கிய மதத்தினரும், 1956ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டனர், மேலும், 1983 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, சிறுபான்மையினர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான உயர் அதிகாரக் குழுவின் (HPP) அடிப்படையில் பௌத்த மதத்தினரும் 1990ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டனர்.

2) அக்டோபர் 2022-ல், மத்திய அரசு, இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி, நீதியரசர் கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களை, பட்டியல் சமூகத்தில் சேர்ப்பதால், தற்போதுள்ள பட்டியலினத்தோர் மத்தியில் ஏற்படும் தாக்கங்களைக் கண்டறிய ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம், தங்களது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்பிக்க, 2 ஆண்டுகள் அவகாசம் அளித்துள்ளது.

இதையும் படிங்க: நடிகையின் கன்னத்தைக் கிள்ளிய எடியூரப்பா! சூடுபிடிக்கும் கர்நாடகா தேர்தல் களம்!

பாஜக தலைமையிலான மத்திய அரசு, உங்களைப் போல் அல்லாமல் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது என்பதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும். மத்திய அரசு ஆணையம் அமைத்து 6 மாதங்களுக்குப் பிறகு, அதே நோக்கத்துக்காக ஒரு கண்துடைப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது யாரை ஏமாற்ற? மத்தியில் 10 ஆண்டுகளாக, ஊழல் காங்கிரஸுடன், திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, இன்று சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை அரசியல் சட்டத்தில் திருத்தமாக கொண்டுவருவதை யார் தடுத்தார்? எந்த தரவுகளின் அடிப்படையில் இன்று இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது என்பதை மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்துவரா? அந்த தரவுகளை பொதுவெளியில் வெளியிடத் தயாரா?

திமுக தலைமையிலான தமிழக அரசு, முதலில், தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவதில் தங்கள் நேரத்தைச் செலவிட வேண்டும் என்றும், தங்கள் கட்சிக்காரர்களால் பட்டியல் சமூக சகோதர, சகோதரிகளின் வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு பாதுகாப்பதே அவர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய உதவி என்றும் கேட்டுக்கொள்கிறோம். இறுதியாக, துபாயில் இருந்து, உங்கள் மகனுக்கும் மற்ற முக்கிய திமுக கட்சியினருக்கும் நேரடித் தொடர்புள்ள நிறுவனமான நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட 1000 கோடி முதலீடு குறித்த எங்கள் கேள்விக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னும் பதிலளிக்கவில்லை என்பதை பணிவன்புடன் நினைவூட்ட விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios