செந்தில் பாலாஜி,மஸ்தானை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குங்கள்! மகளிர் அணியோடு சென்று ஆளுநரிடம் அண்ணாமலை புகார்
கள்ளச்சாரயம் மரணம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலையில், இதனை தடுக்க தவறிய அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் செஞ்சி மஸ்தானை, ஆளுநருக்கான அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
கள்ளச்சாராய மரணம்
மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தமிழக ஆளுநர் ரவியை சந்தித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தது தொடர்பாகவும், உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் குறித்து தமிழக தலைமைச் செயலாளரிடம் விரிவான அறிக்கை கேட்டதற்கு தமிழக பாஜக சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் நன்றி தெரிவித்து கொள்வதாக கூறப்பட்டுள்ளது.
ஆளுநரிடம் புகார் அளித்த அண்ணாமலை
மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் மதுபானம் தொடர்பான வழக்குகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, கடந்த 14 ஆண்டுகளாக தமிழகத்தில் கள்ளச்சாராய மரணங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தமிழக அரசின் இந்த ஆண்டு கொள்கைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தற்போது விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நடந்த உயிரிழப்புகள், மாநிலத்தில் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க இந்த அரசு தவறிவிட்டதைக் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திமுகவைச் சேர்ந்தவர் இருப்பதாகவும் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடன் தொடர்பு வைத்திருப்பதாக தெரிவித்தார். மேலும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜியின் முக்கிய பொறுப்பு மாநிலத்தில் கள்ளச்சாராயத்தைத் தடுப்பதாகும்.
அமைச்சர் பதவியில் இருந்து நீக்குங்கள்
இருப்பினும், அவர் டாஸ்மாக் வருவாயை அதிகரிப்பதில் தான் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார். இந்த தோல்விகளை மறைக்க இழப்பீடு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆளுநர் அவர்கள் இந்த விஷயத்தில் ஆளுநர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் தங்கள் பணிகளைச் செய்யத் தவறியதால், அவர்களை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.
ஆளுநர் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்
தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராக உள்ளதால் தனது அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி விசாரணையின் போக்கை நீர்த்துப்போகச் செய்யவும், விசாரணையை வேண்டுமென்றே தாமதப்படுத்தவும் எல்லா வாய்ப்புகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே செந்தில் பாலாஜியின் பதவிப் பிரமாணத்தையும், ரகசியக் காப்புப் பிரமாணத்தையும் மீறி, ஊழல் வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் பொறுப்பற்ற போக்கிற்காக, தமிழக அரசின் அமைச்சர்கள் குழுவில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்