முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ரூ.80 கோடி செலவில் மெரீனா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படுவதில் எந்தத் தவறும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

கடலூரில் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அமலாக்கத் துறை இரண்டாவது நாளாக விசாரணைக்கு அழைத்துல்லது. இது ஜனநாயக ரீதியாக, சட்டரீதியாக, தார்மீக ரீதியாக தவறு. இன்று மோடி அரசு அரிசி, தயிர், பால் என அனைத்துக்கும் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. மக்கள் கஷ்டப்படும்போது அரிசியை இலவசமாக கொடுக்க வேண்டும் என்ற திட்டம் நாட்டில் வந்தது. அண்ணாதான் முதல்முறையாக அரிசி விலையை குறைத்தார். தற்போது அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால், அரிசிக்கு மோடி ஜிஎஸ்டி வரி விதிக்கிறார். இதனால் அரிசி விலை அதிகரிக்கும்.

இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக திரெளபதி பதவி ஏற்றுள்ளார். சீதை பதவியேற்றால் வரவேற்றிருக்கலாம். ஆனால், திரெளபதி பதவியேறுள்ளார். நாம் சீதையை வணங்குகிறோம். அவர்கள் திரெளபதியை வணங்குகிறார்கள். தவறாக எதுவும் சொல்லவில்லை. ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்த அவர் நியமனத்தை வரவேற்கிறோம். தமிழகத்தில் ஓர் ஆளுநர் இருக்கிறார். அவர் ஆளுநர் வேலையை தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்கிறார். திராவிடத்தைப் பற்றியும் சனாதனத்தைப் பற்றியும் அவர் பேசுகிறார். அது அவருடைய வேலை அல்ல. ஆளுநர் மாநிலத்தில் நடைபெறும் விஷயங்களை மட்டுமே கவனிக்க வேண்டும்.

இதையும் படிங்க: ஓபிஆர் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றால்..! அரசியலை விட்டே விலகிவிடுகிறேன்.! தேனியில் ஆர்.பி.உதயகுமார் சவால்

அவருக்கு ஏதாவது மாற்றுக் கருத்து இருந்தால் முதல்வரை அழைத்து கேட்கலாம்ம். முதல்வரை தவிர்த்து வேறு யாரோடும் கருத்து பரிமாற்றம் செய்யக் கூடாது. அதற்கு ஆளுநருக்கு எந்த உரிமையும் இல்லை. பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநர் செல்கிறார். ஆனால், தமிழக அரசுக்கு தெரியவில்லை. ஆளுநரே மத்திய அமைச்சரை பட்டமளிப்பு விழாவுக்கு அழைக்கிறார். அதுவும் உயர் கல்வித் துறை அமைச்சருக்கே தெரியவில்லை. தமிழக மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மாறாக ஆளுநர் செயல்படுவது நியாயமா? மோடியால் இதற்கு பதில் சொல்ல முடியுமா? இது தவறான விஷயம். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நீங்கள் நசுக்குகிறீர்கள்.

முதல்வரை விட ஆளுநர் உயர்ந்த அதிகாரமிக்கவர் என்று நினைக்கிறீர்களா? இந்திய ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்தான் அதிகாரமிக்கவர். நியமிக்கப்படுகிற ஆளுநர் ஒரு பார்வையாளர் மட்டுமே. முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ரூ.80 கோடி செலவில் வங்காள விரிகுடா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படுவதில் எந்தத் தவறும் கிடையாது. தமிழ் சமூகத்தில் மக்களை தட்டி எழுப்பிய வலிமையான தலைவர் அவர். ரூ.3,000 கோடிக்கு சிலையை வைத்தவர்கள்தான் இது தவறு என்று குறை சொல்கிறார்கள். இது பொறாமையில் சொல்லப்படும் கருத்துகள். ஆளுநர் ரவியை ஆதரித்து தமிழிசை பேசுகிறார். அவரும் ஓர் ஆளுநர். இவரும் ஓர் ஆளுநர். 

இதையும் படிங்க: இது ஜனநாயகத்தை ஒடுக்கும் செயல்... எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரத்தில் திருச்சி சிவா ஆவேசம்!!

புதிய கல்விக் கொள்கை பற்றி கல்வியாளர்கள் பேசலாம். பாஜக கொள்கை பரப்பு செயலாளர்கள் பேசலாம். ஆனால், ஆளுநர் அதை ஒரு வழக்கமாக வைத்துக்கொண்டு சிறந்த கல்விக் கொள்கை என பேசுவதுதான் தவறு. பல மாநிலங்களில் இந்தக் கல்விக் கொள்கை ஏற்கப்படவில்லை. மேலோட்டமாக இத்திட்டம் சரியாக இருக்கும். ஆனால் நடைமுறைக்கு பொருந்தாது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஓர் ஊசி வெடி போல. ஒரு வெடியைக் கொளுத்தி போடுவார். அவ்வளவுதான். அது வெடிக்குதா, வெடிக்கலையா என்றுகூட பார்க்க மாட்டார். இதுவரை எத்தனை குற்றச்சாட்டுகளை சொல்லியிருக்கிறார். ஒன்றையும் அவர் நிரூபிக்கவில்லை. நிரூபிக்க முயற்சியும் செய்யவில்லை. பிறகு அதைப் பற்றி அவர் பேசுவதும் இல்லை” என்று கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுக-அதிமுக தேய்ந்து போன டேப்ரிகார்டர்கள்.. இனி நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க முடியாது.. கிருஷ்ணசாமி ஆவேசம்!