திமுக அரசுக்கு முடிவுரை எழுத, இராமேஸ்வரத்தில் முதல் அடியை எடுத்து வைப்போம்.! அண்ணாமலை அதிரடி டுவீட்
ஊழலில் ஊறித்திளைக்கும் திமுக அரசுக்கு முடிவுரை எழுத, இராமேஸ்வரத்தில் முதல் அடியை எடுத்து வைப்போம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை பாதயாத்திரை
நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் 25 தொகுதிகளை இலக்காக கொண்டு பாஜக பணியாற்றி வருகிறது. இந்தநிலையில் ஊழலுக்கு எதிராக என் மண் என் மக்கள் எனும் பெயரில் தமிழ்நாடு முழுவதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொள்கிறார். இன்று மாலை 5 மணிக்கு ராமேஸ்வரத்தில் துவங்கும் நடைப்பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவக்கி வைக்கவுள்ளார். ராமேஸ்வரத்தில் இன்று தொடங்கும் நடை பயணம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 28,29 ஆம் தேதிகளிலும், 30 ஆம் தேதி பரமக்குடியிலும், 31 ஆம் தேதி திருவாடானை, சிவகங்கை தொகுதியிலும்,
நடை பயணத்தில் புகார் பெட்டி
ஆகஸ்ட் 1 ஆம் தேதி திருப்பத்தூரிலும் நடை பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை ஆகஸ்ட் 15 ஆம் தேதி கன்னியாகுமரி சென்றடைகிறார். இதனையடுத்து ஜனவரி 11ஆம் தேதி சென்னையில் தனது நடைபயணத்தை அண்ணாமலை நிறைவு செய்யவுள்ளார். இந்த நடை பயணத்தில் புகார் பெட்டியில் இடம்பெறவுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. அதில் மக்களின் கோரிக்கைகள், திமுக அரசு மீதான புகார்களை மனுவாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை தொடங்கும் நடை பயணத்திற்காக ராமேஸ்வரம் சென்றுள்ள அண்ணாமலையை பாஜக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். இந்தநிலையில் நடை பயணம்தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
திமுக அரசுக்கு முடிவுரை
இன்று, புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் தொடங்கவிருக்கும் என் மண், என் மக்கள் நடைப்பயணத்தில் பங்கு பெறவிருக்கும் என் அன்பு தமிழக பாஜக சொந்தங்களையும், பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் மக்கள் நலத்திட்டத்தால் பயன் பெற்ற பயனாளிகளையும், பொது மக்களையும் சந்திக்க மிக ஆவலுடன் உள்ளோம்! ஊழலில் ஊறித்திளைக்கும் திமுக அரசுக்கு முடிவுரை எழுத, இராமேஸ்வரத்தில் முதல் அடியை எடுத்து வைப்போம்! என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்