பாதயாத்திரை என்ற பெயரில் மத, சமூக பதற்றத்தை ஏற்படுத்த பாஜக திட்டம்..? காவல்துறையை அலர்ட் செய்யும் காங்கிரஸ்
ஊழல் செய்த அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதி மறுக்கும் ஆளுநர் செயல்பாடுகள் குறித்தும், பாஜகவை எதிர்க்கும் அரசியல் பிரமுகர்களை அமலாக்கத்துறை, சி.பி.ஐ, வருமான வரித்துறை மூலம் பழிவாங்குவது குறித்தும் தமிழ்நாட்டு மக்களிடம் அண்ணாமலை பேசுவாரா? என செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணாமலை நடை பயணம்
தமிழகம் முழுவதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று நடை பயணத்தை தொடங்கவுள்ள நிலையில், இதுதொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது, பிரதமர் மோடி அவர்கள் ராமநாதபுரத்தில் 13 ஏப்ரல் 2019 அன்று பேசும் போது, 'இந்தியாவில் ஏழ்மையைப் போக்குவதே எனது கடமை. ஏழ்மையின் வலியை உணர்ந்தவன் நான். ஏனென்றால், ஏழைத்தாயின் மகன் நான் ரயிலில் பெட்டி பெட்டியாக ஏறி டீ விற்றவன். ஏழ்மையை அனுபவித்தவன். எனக்கு 300 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தாருங்கள். இந்தியாவின் ஏழ்மையைப் போக்குகிறேன் என்று பேசினார்'. மோடி சொன்னதை செய்துவிட்டாரா?
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினாரா மோடி.?
நாளை (28.07.2023) ராமேஸ்வரத்தில் இருந்து தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை செல்லப்போகும் தமிழ்நாட்டின் பா.ஜ.க. தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் பிரதமர் கூறியதை நிறைவேற்றிவிட்டார் என்று தமிழ்நாட்டு மக்களிடம் அண்ணாமலை பேசுவாரா? பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவோம், ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை பாதியாகக் குறைப்போம். இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியதைப் பற்றி தமிழ்நாட்டு மக்களிடம் பேசுவாரா அண்ணாமலை? மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி வரிப்பங்களிப்பில் உரிய நிதி வழங்காமல் தமிழ்நாட்டை வஞ்சிப்பது குறித்தும்,
ஆர்எஸ்எஸ் சிந்தனை கொண்ட ஆளுநர் ரவி
அதானி குழுமத்தின் மெகா முறைகேடுகள் குறித்த இண்டென்பர்க் அறிக்கை குறித்தும்அண்ணாமலை பேசுவாரா? விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது குறித்தும், ஆர்.எஸ்.எஸ். சிந்தனை கொண்டவர்களை ஆளுநர்களாக நியமித்து, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை முடக்குவது குறித்தும், ஊழல் குறித்து பேசும் அண்ணாமலை,ஊழல் செய்த அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதி மறுக்கும் ஆளுநர் செயல்பாடுகள் குறித்தும், பாஜகவை எதிர்க்கும் அரசியல் பிரமுகர்களை அமலாக்கத்துறை, சி.பி.ஐ, வருமான வரித்துறை மூலம் பழிவாங்குவது குறித்தும் தமிழ்நாட்டு மக்களிடம் பேசுவாரா அண்ணாமலை?
தீவிரவாத குழுவோடு முதல்வருக்கு தொடர்பு
தற்போது மணிப்பூரில் பற்றி எறியும் பிரச்சனைகள் குறித்தும், மேலும், மணிப்பூர் வன்முறைக்கு மாநில அரசும் உடந்தையாக செயல்பட்டது என்றும், மெய்தி சமூகத்தின் வன்முறையாளர்களுக்கு அரசு உதவி செய்கின்றது என்றும், தீவிரவாதக் குழுக்களுடன் மாநில முதல்வர் பைரன் சிங் நேரடி தொடர்பில் இருக்கிறார் என்று மணிப்பூர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பவுலியன்லல் ஹாவ்கிப் கூறினார். இவற்றை பற்றியெல்லாம் தனது பாதயாத்திரை மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லும் மன தைரியம் உண்டா?
காவல்துறை எச்சரிக்கையாக இருக்கனும்
தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கும் சூழலில், இந்தியா முழுவதும் வெறுப்பு அரசியல் செய்து வரும் மதவாத கட்சியான பா.ஜ.க. பாதயாத்திரை என்ற பெயரில் மத, சமூக பதற்றத்தை ஏற்படுத்தப் போகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. பா.ஜ.க. நடத்தவுள்ள பாதயாத்திரை விவகாரத்தில்; தமிழ்நாடு காவல்துறை மற்றும் உளவுத்துறை மிகவும் எச்சரிக்கையாகயும், விழிப்புடணும் செயல்படவேண்டும் என செல்வப்பெருந்தகை கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்
பாத யாத்திரையை இன்று தொடங்கும் அண்ணாமலை..! பாஜகவிற்கு திடீர் டுவிஸ்ட் கொடுத்த அதிமுக