காயத்ரி ரகுராமின் மார்பிங் புகைப்படம் வெளியிட்ட பாஜக நிர்வாகி.! தொண்டர்களுக்கு திடீர் அட்வைஸ் சொன்ன அண்ணாமலை
அவதூறு பரப்புவதையே முழு நேர பணியாக கொண்டு இயங்கி வரும் சிலருக்கு பதில் அளித்து உங்கள் நேரத்தை வீணடிக்காமல் கடந்து செல்ல கற்றுக்கொள்ளுங்கள் என அண்ணாமலை பாஜக நிர்வாகிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

மார்பிங் படத்தை வெளியிட்ட பாஜக நிர்வாகி
தமிழக பாஜகவில் உட்கட்சி மோதலால் கடந்த சில மாதங்களாக பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனையடுத்து பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்த நடிகை காயத்ரி ரகுராமை கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து தனது டுவிட்டரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்து தொடர்ந்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். இந்தநிலையில், ராணிப்பேட்டை மாவட்ட எஸ் சி பிரிவின் துணை தலைவராக இருப்பவர் டி.பாபு இவர் தனது டுவிட்டரில் காயத்ரி ரகுராம் படத்தை மார்பிங் செய்து வெளியிட்டு ஆபாசமாக திட்டியும் உள்ளார். இந்த பதிவை பார்த்த பலரும் அந்த பாஜக நிர்வாகியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கடந்து செல்ல கற்றுக்கொள்ளுங்கள்!
இந்தநிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சி நிர்வாகிகளுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பலரின் தியாகத்தாலும், பலரின் அயராத உழைப்பாலும் வளர்ந்த நமது கட்சி, விமர்சனங்களுக்கு அஞ்சுவதா? விமர்சனங்கள் நமது கட்சியின் வளர்ச்சிக்கான உரம். ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுங்கள், அவதூறுகளை ஒதுக்கி தள்ளுங்கள். சமீப காலமாக என் மீது சமூக வலைத்தளங்களில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நமது கட்சியின் சகோதர சகோதிரிகளும் தன்னார்வலர்களும் மிக ஆக்ரோஷமாக எதிர்வினையாற்றி வருவதாக அறிகிறேன். கட்சியின் தொண்டர்களும் தன்னார்வலர்களும் தங்களது சமூக வலைத்தளங்களில் எதிர்வினையாற்றும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
வீண் விமர்சனங்கள் வேண்டாம்
உங்களுக்கு பதில் அளிக்க தெரியாது என்பது பொருள் அல்ல. சில விமர்சனங்களுக்கு காத்திருந்து பதில் அளிப்பதை காட்டிலும் கடந்து செல்வதே ஆக சிறந்தது. மக்கள் பணியில் நாட்டம் கொண்டு, பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து வரும் நீங்கள், நமது கட்சியின் முன்னாள் உறுப்பினர்களுக்கோ, எதிர்கட்சியினரின் வீண் விமர்சனங்களுக்கோ அல்லது சில பல சமூக வலைதள பரப்புரையாளர்களுக்கோ செவி சாய்க்காமல், உங்கள் தொகுதியில் நமது கட்சியின் வளர்ச்சிக்கு பங்காற்றுங்கள். விஷமத்தனமான கருத்துக்களை பரப்பி உங்கள் கவனத்தை சிதறடிப்பது தான் சமூக வலைதள பரப்புரையாளர்களின் முழு நேர வேலை. நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். நமது கருத்தில் ஆழம் உள்ளபோது அவதூறுகளுக்கு அவசியம் ஏற்படாது. என் மேல் தினம்தோறும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர். சில பத்திரிக்கைகள் என்னை பற்றி அவதூறு பரப்பினால் தான் அவர்களின் பிழைப்பு நடக்கும் என்ற நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளனர்.
அவதூறு பரப்புவதையே முழு நேர பணி
இவர்களுக்கு பயந்தால், என்னுடைய கிராமத்தில் நான் ஒடுங்கி கிடக்க வேண்டியது தான். அதை தான் அவர்களும் விரும்புகிறார்கள் என்பதையும் நான் அறிவேன். நமது செயல்பாடுகள் அவதூறு பரப்புவோருக்கு எரிச்சல் தருமேயானால், நாம் சரியான திசையில் பயணிக்கிறோம் என்பதையே அது வெளிக்காட்டுகிறது.உங்கள் கருத்தை முன்வைக்க தயங்காதீர், பகிரங்கமாக உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள்! அதே சமயம், அவதூறு பரப்புவதையே முழு நேர பணியாக கொண்டு இயங்கி வரும் சிலருக்கு பதில் அளித்து உங்கள் நேரத்தை வீணடிக்காமல் கடந்து செல்ல கற்றுக்கொள்ளுங்கள் என அண்ணாமலை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்