புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்ட பாஜக நிர்வாகி..! சைபர் கிரைமில் புகார் அளித்து அதிரடி காட்டிய காயத்ரி
நடிகையும், பாஜகவின் முன்னாள் நிர்வாகியுமான காயத்ரி ரகுராமின் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்ட பாஜக நிர்வாகி மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக உட்கட்சி மோதல்
தமிழக பாஜகவில் உட்கட்சி மோதலால் கடந்த சில மாதங்களாக பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. அண்ணாமலையில் வலது கரமாக இருந்த சூர்யா சிவா பாஜக பெண் தலைவரான டெய்சி சரனை ஆபாச வார்த்தைகளால் திட்டியும், கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சூர்யா சிவா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து சூர்யா சிவா பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
அண்ணாமலை- காயத்ரி மோதல்
இதே போல பாஜகவில் வெளிநாடு மற்றும் வெளி மாநில கலாச்சார பிரிவின் தலைவராக செயல்பட்டவர் நடிகை காயத்ரி ரகுராம், பாஜகவின் தமிழக தலைவரான அண்ணாமலைக்கும் காயத்ரிக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில் சமூகவலை தளத்தில் கருத்துகளை பதிவிட்டு வந்தார். இதனையடுத்து அவரையும் கட்சியில் இருந்து இடைக்காலமாக நீக்கி அண்ணாமலை உத்தரவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்து அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை பதிவிட்டு வந்தார்.
மார்பிங் புகைப்படத்தை வெளியிட்ட பாஜக நிர்வாகி
ஈரோடு இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட தயாரா என கேள்வி எழுப்பியவர், அண்ணாமலையின் நடை பயணத்திற்கு போட்டியாக தானும் நடை பயணம் செய்ய இருப்பதாக அறிவித்தார். இதன் காரணமாக பாஜக நிர்வாகிகள் காயத்ரி ரகுராமை கடுமையாக சமூகவலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர். இந்தநிலையில் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்சி பிரிவின் துணை தலைவராக இருப்பவர் டி.பாபு இவர் தனது டுவிட்டரில் காயத்ரி ரகுராம் படத்தை மார்பிங் செய்து வெளியிட்டு ஆபாசமாக திட்டியும் உள்ளார். இந்த பதிவை பார்த்த பலரும் அந்த பாஜக நிர்வாகியை கடுமையாக விமர்சித்தனர்.
மாரிதாஸ் கண்டனம்
பாஜக ஆதரவாளராக இருக்க கூடிய மாரிதாசும் இந்த பதிவை கண்டித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், காயத்திரி மீது அநாகரிகமாகப் பதிவுகளை வெளியிடுவதைக் குறிப்பிட்ட பிரிவினர் உடனடியாக நிறுத்த வேண்டும். கருத்து வேறுபாடுகளுக்கு எதிர்ப்பை தெரிவிப்பதில் குறைந்த பட்ச நாகரீகம் கூட இல்லை. இதைச் சகித்துக் கொள்ளமுடியாது. நீங்கள் செய்வது விமர்சனமல்ல கொலை. அதுவும் உங்களை நம்பி பயணித்தவர் என குறிப்பிட்டுள்ளார்.
நடிகை கஸ்தூரியும் இந்த மார்பிங் புகைப்படத்திற்கு கண்டித்து பதிவு செய்திருந்தார்.இந்தநிலையில் இந்த மார்பிங் புகைப்படம் தொடர்பாக கருத்து தெரிவித்த காயத்ரி ரகுராம், அண்ணாமலை வார்ரூம் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கு மார்பிங் திறன்களைப் பயிற்றுவிப்பது போல் தெரிகிறது என பதிவிட்டுள்ளார்.
சைபர் கிரைமில் புகார்
மேலும் பாஜகவிற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும் நம் இந்தியாவிற்கும், அண்ணாமலையின் தலைமை பெண்களுக்கு ஆபத்தானது என கூறியுள்ளார். எனது புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்டதற்காக சம்பந்தப்பட்ட TN BJP நிர்வாகி மீது சைபர் கிரைம் புகாரை பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்