மக்களை பாதிக்காத வகையில் பேருந்து கட்டண உயர்வு இருக்கும் என  அமைச்சர் நேருவின் தகவல் அதிர்ச்சி அளிப்பதாக பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ்  தெரிவித்துள்ளார். 

மக்களை பாதிக்காத வகையில் பேருந்து கட்டணம்

தமிழகத்தில் நிதிபற்றாக்குறை காரணமாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் கடனாக 6.53 லட்சம் கோடி உள்ளது இந்தநிலையில் புதிய திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசிற்கு நிதி தேவைப்படும் நிலை உள்ளது. இந்தநிலையில் திமுக அரசு பதவியேற்ற ஒரு வருட காலத்தில் ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, பத்திர பதிவு முத்திரை கட்டணம், டாஸ்மாக் கட்டணம் போன்றவற்றை தமிழக அரசு விலை உயர்த்தி உள்ளது. இந்தநிலையில் தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் கட்டணம் மற்றும் பராமரிப்பு பணி போன்றவற்றால் போக்குவரத்துத்துறை நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பேருந்து கட்டணம் உயர இருப்பதாக தகவல் வெளியானது. அமைச்சர் நேருவும் பொதுமக்கள் பாதிக்காத வகையில் கட்டண உயர்வை முதலமைச்சர் அறிவிப்பார் என கூறியிருந்தார்.

அமைச்சர் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது.

இந்தநிலையில் அமைச்சர் நேருவின் கருத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டர் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் பேருந்து கட்டணங்களை மக்களை பாதிக்காத வகையில் உயர்த்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது மக்களை அச்சத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தும். இது தேவையற்றது; தவிர்க்கப்பட வேண்டும்! என கூறியுள்ளார். மேலும் பேருந்து கட்டணம் மிக, மிக குறைந்த அளவில் உயர்த்தப்பட்டால் கூட அது மக்களை கடுமையாக பாதிக்கும். இத்தகைய சூழலில் மக்களை பாதிக்காத பேருந்து கட்டண உயர்வு என்று அமைச்சர் கே.என். நேரு கூறியிருப்பதன் பொருளை புரிந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார். பேருந்து கட்டணம் கட்டணம் உயர்த்தப்படாது என்று கடந்த வாரம் தான் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த வாரம் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் நேரு கூறுகிறார். ஏன் இந்த குழப்பம்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுபியுள்ளார். இந்தநிலையில் வரலாறு காணாத பணவீக்கத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. இந்த நேரத்தில் பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட்டால் அதை மக்களால் தாங்க முடியாது என கூறியுள்ளார் எனவே கட்டண உயர்வுக்கு பதிலாக சீர்திருத்தங்கள் மூலம் போக்குவரத்து கழகங்களை லாபத்தில் இயக்க வேண்டும் என தமிழக அரசை அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

பொதுமக்கள் பாதிக்காத வகையில் பேருந்து கட்டண உயர்வு...? அமைச்சர் நேரு பதிலால் அதிர்ச்சியில் பொதுமக்கள்