பொதுமக்கள் பாதிக்காத வகையில் பேருந்து கட்டண உயர்வு...? அமைச்சர் நேரு பதிலால் அதிர்ச்சியில் பொதுமக்கள்
தமிழக நிலை மோசமாக உள்ளதால் பேருந்து கட்டணம் உயர உள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியநிலையில், பொதுமக்கள் பாதிக்காத வகையில் பேருந்து கட்டணம் உயர்த்த வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.

பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டம்
தமிழகத்தில் நிதிபற்றாக்குறை காரணமாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் கடனாக 6.53 லட்சம் கோடி உள்ளது இந்தநிலையில் புதிய திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசிற்கு நிதி தேவை ஏற்பட்டுள்ளது இதனையடுத்து டாஸ்மாக் மதுபான பாட்டில்களின் விலையை இரண்டு முறை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. ஆவின் பால் பொருட்களின் விலையும், சொத்து வரியையும் தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. இந்தநிலையில் தமிழக அரசுக்கு பேருந்து கட்டணத்தை உயர்த்த உள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சேலத்தில் கருத்து தெரிவித்த அவர், கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சொத்து வரி உயர்வு மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.ஆண்டுக்கு ஒருமுறை சொத்து வரி உயர்வு என்பது ஏற்க முடியாது என கூறியவர், நிதி ஆதாரத்தை திரட்ட திமுக அரசிடம் எந்த திட்டமும் இல்லையென கூறினார். இதனால் விரைவில் போக்குவரத்து கட்டணம், மின் கட்டணம் உயர உள்ளதாக தெரிவித்தார். அரசு ஊழியர்களையும், ஓய்வு பெற்றவர்களையும் நம்ப வைத்து தி.மு.க. அரசு கழுத்தை அறுத்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
மக்கள் பாதிக்காத வகையில் கட்டண உயர்வு?
இந்தநிலையில் அமைச்சர் கே.என் நேரு சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், நிதி ஆதாரத்தை திரட்ட சொத்து வரி, பொது போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தினால் அதனை செயல்படுத்தாதே என அதிமுக கூறுகிறது. திமுக அரசு ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் 1 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளதாக கூறுகிறார்கள். கொரோனா பாதிப்பு, மழை வெள்ளம் பாதிப்பு போன்றவற்றை சமாளிக்க மிகப்பெரிய அளவில் நிதி தேவைப்பட்டது. இந்தநிலையில் பல்வேறு சிறப்பு திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டை விட 7 ஆயிரம் கோடி அளவிற்கு நிதி பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சி ஆளுங்கட்சியை எதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக குறை சொல்வதாக தெரிவித்தார். கடந்த 30 ஆண்டுகாலமாக ஒவ்வொரு பொருளின் விலையும் அதிகரித்து கொண்டுள்ளது. எனவே அதிமுக ஆட்சி காலத்தில் எதுவுமே விலை ஏறவில்லையா என கேள்வி எழுப்பினார், திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில் பல மடங்கு ஜல்லி, சிமெண்ட் விலை உயர்ந்ததாகவும் கூறினார். எனவே பேருந்து கட்டணம் உயர்வை பொறுத்தவரை மக்கள் பாதிக்காத வகையில் முதலமைச்சர் முடிவெடுப்பார் என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்தார்.