ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீனை நீட்டிக்கக்கோரிய மனு மீது செப்டம்பர் 3-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கூறியுள்ளது. 

கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் விதிமுறைகளை மீறி முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. இதில், கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் முறைகேடாக பணம் பெற்றதாக சிபிஐ குற்றம்சாட்டியது. இது தொடர்பாக அமலாக்கத்துறையும், சிபிஐயும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. 

சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தங்களை கைது செய்ய தடை விதிக்க கோரி இருவரும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இதையடுத்து, அவர்களை கைது செய்ய தடை விதித்து அதை பல தடவை நீதிமன்றம் நீட்டித்தது. இந்த வழக்கு ஆகஸ்ட் 23-ம் தேதி வரை ஒத்திவைத்தது. 

இதையும் படிங்க;- அப்பாடா... அமலாக்கத்துறையிடம் தப்பிய ப.சிதம்பரம்..!

மீண்டும் இந்த வழக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்ஜாமீன் மனு மீது செப்டம்பர் 3-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் 5 நாள் சிபிஐ காவலில் உள்ள நிலையில் இந்த வழக்கு மேலும் அவருக்கு சிக்கலை எற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.