அதிமுகவே அதிர்ந்து போகும் அளவுக்கு அக்கட்சியில் இருந்து 15 எம்எல்ஏக்களை தூக்க திமுக ஸ்கெட்ச் போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சென்னை: அதிமுகவே அதிர்ந்து போகும் அளவுக்கு அக்கட்சியில் இருந்து 15 எம்எல்ஏக்களை தூக்க திமுக ஸ்கெட்ச் போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர்ந்த திமுகவை தொடக்கத்தில் விமர்சிக்காமல் சைலண்ட் பார்வையாளர்களாக இருந்த அதிமுகவும், பாஜகவும் இப்போது போட்டு தாக்கி வருகின்றன. எதிர்க்கட்சி என்ற போதிலும் உள்கட்சி பிரச்சனையில் அதிமுக சிக்கி தவித்து வருகிறது தனிக்கதை.

இந்த பக்கம் சசிகலா, அந்த பக்கம் டிடிவி தினகரன் என்று சவால்களை சந்தித்து வரும் அதிமுக இப்போது அதன் உச்சமாக ரெய்டு, வழக்கு என்று திமுக பெரும் கலக்கத்தை கொடுத்து வருகிறது.

முன்னாள் அமைச்சர்களை குறி வைத்து நடத்தப்பட்ட ரெய்டுகள் கட்சியின் முக்கிய பிரமுகர்களை அசைத்து பார்க்க ஆரம்பித்துள்ளது. கூடிய விரைவில் சென்னையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சருக்கு எதிரான பழைய கசமுசா புகார் ஒன்றை கையில் திமுக தலைமை முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் எழுந்துள்ளன.

இந் நிலையில் திமுக மீது அதிமுக கூறி வரும் குற்றச்சாட்டுகள், கண்டனங்களை திசை திருப்பும் வகையில், கட்சியின் முக்கிய எம்எல்ஏக்களை வளைக்கும் நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கொங்கு மண்டலத்தை திமுகவுக்கு தேர்தல் முடிவுகள் கை கொடுக்காதது அனைவருக்கும் தெரியும்.

ஆகையால் கொங்கு மண்டலத்தில் இருந்து ஆப்ரேஷனை தொடங்கி இருக்கிறதாம் திமுக. கொங்கை தொடர்ந்து, வட மேற்கு மாவட்டங்களில் ஆப்ரேஷனை நீட்டிக்க திமுக பிளான் செய்திருப்பதாக தெரிகிறது.

அதற்காக முக்கிய அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு வலைவீசப்பட்டு இருக்கிறதாம். உள்ளாட்சி தேர்தலில் முழு வெற்றியை பெரும் வகையில் கங்கணம் கட்டிக் கொண்டு திமுக முக்கிய பிரமுகர்கள் களம் இறங்கி உள்ளனராம்.

திமுகவின் இந்த அதிரடி ஆப்ரேஷனுக்கு முதல்கட்டமாக அதிமுக தரப்பில் இருந்து சிக்னல் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஸ்டிராங்காக உள்ள பாப்பிரெட்டி தொகுதியே அதற்கு உதாரணமாக மாற போகிறதாம்.

வன்னியர் சமூகத்தை சேர்ந்த அதிமுக எம்எல்ஏ ஒருவரும், தனித் தொகுதியை சேர்ந்த மற்றொரு எம்எல்ஏவும் திமுக பவர்புல் அமைச்சருடன் கடந்த சில நாட்களாக நேரடி தொடர்பில் இருக்கிறார்கள் என்று திமுக தரப்பில் இருந்து பரபர தகவல்கள் வெளியாகி உள்ளன. அமைச்சர் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு சென்றே அதிமுக எம்எல்ஏ நேருக்கு நேராக பல மணி நேரம் சந்தித்து பேசி உள்ளாராம்.

இதுவே ஜெயலலிதா இருந்த காலத்தில் நடக்குமா? திமுக எம்எல்ஏக்களை பார்த்து தெறித்து ஓடுவார்களே அதிமுக எம்எல்ஏக்கள், இப்போது நடப்பதை பார்த்தால் என்ன சொல்வது என்று ரத்தத்தின் ரத்தங்கள் பொருமி தள்ளி வருகின்றனர்.

அடுத்த சில வாரங்களில் இந்த சந்திப்புக்களுக்கான பலன்கள் தெரியவரும் என்று திமுக தரப்பில் தெம்பாக கூறப்படுகிறது. இவர்கள் 2 பேர் மட்டுமல்ல, மேலும் 13 பேருக்கு திமுக தரப்பு வலைவீசி உள்ளதாம். அவர்களை வளைக்கும் பொறுப்பும் முக்கிய அமைச்சர்களுக்கு சில பிளான்களுடன் தரப்பட்டு உள்ளதாம். அந்த வேலைகளும் படு ஸ்பீடாக நடக்க ஆரம்பித்து உள்ளதாக சொல்லப்படுகிறது.

எந்த கொங்கு மண்டலம் தங்களை கைவிட்டு உள்ளதோ, அதே கொங்கு பகுதியில் இருந்து மெஜாரிட்டியான அதிமுக எம்எல்ஏக்களை கொத்தி வர அசைன்மென்ட் நடந்து வருவதாகவும் அறிவாலய தகவல்கள் தந்தியடிக்கின்றன.

இதன் மூலம் திமுக அரசுக்கு எதிரான அதிமுக அரசியல் நடவடிக்கைகள் மட்டுப்படும் என்றும் உட்கட்சி விவகாரங்களில் அவர்கள் கவனம் செலுத்துவார்கள் என்றும் சூரிய கட்சி ஆணித்தரமாக நம்புகிறதாம்… கூடிய விலையில் இலை எம்எல்ஏக்கள் பலரும் சூரிய கட்சியில் ஜாயின்ட் பண்ணுவார்கள் என்று அடித்து சொல்கின்றனர் திமுக முக்கிய நிர்வாகிகள்…!!