ஈரோடு தேர்தல் தோல்விக்கு யார் காரணம்..? அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு தேதி குறித்த இபிஎஸ்
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக 66 ஆயிரம் வாக்குகள் வித்திசாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், இந்த தேர்தல் தோல்வி தொடர்பாக ஆலோசிக்க வருகிற 9 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு தேர்தல்- அதிமுக தோல்வி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2 ஆம் தேதி எண்ணப்பட்டது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,556 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகளும் பெற்றிருந்தனர். இருவருக்குமான வாக்குகள் வித்தியாசம் 66,575 வாக்குகளாக இருந்தது. கொங்கு மண்டலத்தில் பலம் வாய்ந்த அதிமுகவால் 50 ஆயிரம் ஓட்டுகள் கூட வாங்க முடியாமல் தோல்வி அடைந்தது அதிமுக தொண்டர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இந்த தேர்தல் தோல்விக்கு பல்வேறு காரணங்களை எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு திமுகவினர் பணமும், பரிசு பொருட்களும் கொடுத்ததாக தெரிவித்தார். மேலும் வாக்காளர்களை ஆட்டை அடைப்பது போல் பட்டியில் அடைத்ததாகவும் குற்றம்சாட்டினார்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு
வாக்கு பதிவின் போது இரட்டை இலைக்கு வாக்களித்தால், கை சின்னத்தில் லைட் எரிவதாகவும் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற தேர்தல் தோல்வி தொடர்பாக ஆலோசிக்க அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். வருகிற 9ஆம் தேதி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தேர்தல் தோல்வி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்படவுள்ளது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் முக்கிய பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தோல்வியே கிடைத்துள்ளது. எனவே இது குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
இதையும் படியுங்கள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. மதவாத சக்திகளுக்கு சம்மட்டி அடி.! பாராட்டிய கமல்ஹாசன் !!